வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு எளிமையாக மாற்றிக் கொள்வதற்கான, புதிய அப்டேட்டை சோதனை முறையில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


எளிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம்  குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின்  மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.  டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்வதோடு இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் எளிதாக அனுப்ப முடிகிறது. 


அடுத்தடுத்து வரும் அப்டேட்:


மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதில் பயனார்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அப்டேட்களை,  வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் சாட் ஹிஸ்டரியை எளிமையாக ஒரு போனில் இருந்து மற்றொரு போனிற்கு மாற்றுவதற்கான புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. 


ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்பர்:


வாட்ஸ்-அப் செயலியில் உள்ள சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து ஐஒஎஸ்-ற்கும் அதிலிருந்து மற்றொரு ஐஒஎஸ்-ற்கும் மாற்றும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அதைதொடர்ந்து தற்போது, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை வேறொரு ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.


”கூகுள் டிரைவ் தேவைப்படாது”


தற்போதைய சூழலில் ஆண்ட்ராய்ட் வாட்ஸ்-அப் பயனாளர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர தரவுகள் அடங்கிய தங்களது சாட்-ஹிஸ்டரியை கூகுள் டிரைவில் பேக்-அப் எடுக்கும் வசதி உள்ளது. பயனாளர்கள் புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு தங்களது வாட்ஸ்-அப் கணக்கை மாற்றினால், உடனடியாக கூகுள் டிரைவின் உதவியுடன் தங்களது பழைய போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஸ்மார்ட் போனிற்கு பரிமாறிக்கொள்ளலாம். எனவே, பழைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்ற வேண்டுமானால், கூகுள் டிரைவின் உதவி என்பது கட்டாயமாக உள்ளது. அதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொள்ளும்.


புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?


சாட் ஹிஸ்டரி பரிமாற்றத்தை தொடங்க முதலில் க்யூஆர்  கோடை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்பு அடுத்தடுத்து கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி எளிதில் தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம். கூகுள் டிரைவ் என்றால் முதன்மையான போனில் உள்ள தரவுகளை ஸ்கேன் செய்து, நகலெடுத்து பின்பு தான் இரண்டாவது போனிற்கு மாற்ற வேண்டும். ஆனால், புதிய முறையில் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து தரவுகலை பரிமாறுவதால், நகலெடுக்க வேண்டிய கட்டாயமின்றி குறைந்த நேரத்திலேயே முழுமையாக மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி தற்போது சிலருக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது.