அதிமுகவின் போலி பொதுக்குழுவை கலைப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ்.வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:”கழப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடெக்கப்பட்ட ஒருஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை பதவியில் இருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தான் என்ற விதியை மாற்றியும் அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழக செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட கழக செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பரித்தும், இவ்வாறு கழக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டு வந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட தற்போதைய போலி பொது குழு அறவே கலைக்கப்பட வேண்டும் என்றும், கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் 24-04-2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பரிந்துரை செய்தது.
அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு இன்று முதல் (01-05-2023) கலைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ள கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும் அதன்பிறகு முறையான நேர்மையான தேர்தல் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு சுமார் 20 கோடி ரூபாய் செலவானதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் நினைத்தவாறு இந்த மாநாடு இல்லை என்று ஆதரவாளர்கள் வட்டத்திலேயே அதிருப்தி எழுந்துள்ளது. மேலும், விழாவிற்கு சசிகலா, டிடிவி தினகரன் அழைக்கப்பட்டும் அவர்கள் வரவில்லை என்பதால் மாநாடு பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில், திருச்சியில் நடந்த முப்பெரும் விழா வெற்றி அடைந்ததாக ஓபிஎஸ், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.