ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பாடிக்கொண்டிருந்ததை, காவல்துறையினர் பாதியிலேயே தடுத்து நிறுத்திய சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.


ஏ.ஆர். ரகுமான்:


தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான், ஆஸ்கர் விருதுகளை வென்று உலகையே திரும்பி பார்க்க செய்தார். இவருக்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு இசைநிகழ்ச்சியையும் காண ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் புனேவில் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசைநிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


ரகுமானின் இசைநிகழ்ச்சி:


புனேவில் ராஜ்பகதூர் மில்ஸ் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கடந்த 30 ஆண்டுகளாக தனது இசையில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை ஏ.ஆர். ரகுமான் பாடி அசத்தினார். இதை கேட்ட அங்கு திரண்டிருந்த ரசிகர்களும், அவருடன் சேர்ந்து உற்சாகமாக பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.






தடுத்து நிறுத்திய போலீசார்:


இரவு 10 மணியை கடந்து தொடர்ந்த நிகழ்ச்சியில், ”சல் சைய்ய சைய்யா” பாடலை ஏ.ஆர். ரகுமான் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல் அதிகாரி ஒருவர், நிகழ்சிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது, உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். அதைகேட்காத இசைக்கலைஞர்கள் தொடர்ந்து வாத்தியங்களை வாசித்துள்ளனர். தொடர்ந்து, உடனடியாக நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளாவிட்டால்  சட்டநடவடிக்கை பாயும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறிய காவல் அதிகாரி, ஏ.ஆர். ரகுமானிடமும் நேரடியாக சென்று கைக்கடிகாரத்தை காட்டி சூழலை எடுத்துக்கூறியுள்ளார்.


ரசிகர்கள் எதிர்ப்பு:


காவல்துறையின் வலியுறுத்தலை ஏற்று எந்தவித எதிர்ப்பையும் கூறாமல் ஏ.ஆர். ரகுமான், நிகழ்ச்சி நடந்த மேடையை விட்டு வெளியேறியுள்ளார். அதேநேரம், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காவல்துறை அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்ட பிறகும் கூட அவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  சிறிது நேரம் கழித்து எந்தவித பிரச்சினையும் இன்றி, அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.  ரகுமானின் இசைநிகழ்ச்சி பாதியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டடதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.