WhatsApp Feature : வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் பலருடம் உரையாடும் வசதி போன்ற அம்சத்தை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


வாட்ஸ் அப்


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன


மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட் போன்று அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய வசதி


அந்த வரிசையில், தற்போது வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் ஸ்க்ரீன் ஷேரிங் (Screen Sharing) என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா. நாம் ஏற்கனவே அலுவலகம் சார்ந்த கான்பிரன்சிங் செய்வதற்காக கூகுள் மீட், ஜூம் மீட் போன்ற வீடியோ காலிக் ஆப்ஸ்களைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இனி வாட்ஸ் அப்பிலும் நம்மால் வீடியோ கான்பிரன்சிங் செய்ய முடியும்.


அதாவது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்போது, அதை ஹோஸ்ட் செய்யும் நபரோ அல்லது வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனையோ அல்லது லேப்டாப் ஸ்கிரீனையோ அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்து கொள்ள முடியும்.


அதேபோல், வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வந்த உடன் நீங்கள் வீடியோ கால் செய்யும்போது, கீழே இருக்கும் மைக், வீடியோ டிஸ்கனெக்ட், மியூட் ஆகிய டேப்களுக்கு இடையே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தவுடன் உங்களது போனின் ஸ்கிரீன் அனைவருக்கும் தெரியும்படி டெலிகாஸ்ட் செய்யப்படும். அதன்பின்பு, மீண்டும் அதே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பை கிளிக் செய்தால் உங்களது ஸ்கிரீன் அவர்களுக்கு தெரியாது.


சைலன்ஸில் போடும் வசதி:


மேற்குறிப்பிட்ட அம்சம் தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் தாமாகவே சைலன்ஸில் போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, செட்டிங்ஸ் அம்சத்தில் பிரைவசிக்குள் சென்று கால்ஸ் எனும் பிரிவில் “silence unknown calls” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், அநாவசிய தொந்தரவுகளை பயனாளர்கள் தவிர்க்கலாம் என, மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.