முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஆதிபுருஷ் படத்தை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிண்டலுக்கு உண்டான ‘ஆதிபுருஷ்’
வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஆதிபுருஷ் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்த இப்படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது.
படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில் நாளுக்கு நாள் வசூலில் குறைந்து வருகிறது. பாகுபலிக்குப் பின் பிரபாஸ் சினிமா கேரியரில் ஹாட்ரிக் தோல்வி என ரசிகர்கள் கழுவி ஊற்றும் அளவுக்கு படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமை விட மோசமாக உள்ளதாக கடந்தாண்டு டீசர் வெளியான போதே சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு ஆதிபுருஷ் படம் வெளியானது.
திட்டித் தீர்க்கும் நடிகர்கள்
ஆனால் ரசிகர்களை கவர தவறிய இப்படம் மீம் கிரியேட்டர்களின் கண்டெண்டுகளாக மாறியுள்ளது. மகாபாரதத்தில் பீஷ்மராக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா, தயாரிப்பாளர்கள் ராமாயணத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டி ஆதிபுருஷ் படத்தை கடுமையாக சாடியிருந்தார். ராமாயணத்திற்கு ஆதிபுருஷை விட பெரிய அவமரியாதை எதுவும் இல்லை. முட்டாள்தனமான வசனங்களும், தூக்கத்தை வரவழைக்கும் திரைக்கதையும் தூக்க மாத்திரைகளைக்கூட முகம் சுளிக்க வைக்கும் படத்தை உருவாக்கியுள்ளது என சகட்டுமேனிக்கு படத்தை விமர்சித்திருந்தார்.
இதேபோல் மகாபாரதம் தொடரில் நடித்த கஜேந்திர சவுகான், ‘இந்தப் படத்தைப் பார்க்க நான் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால் சில காரணங்களால், நான் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்பதை என் மனசாட்சி ஏற்க மறுத்து விட்டது’ என தெரிவித்திருந்தார்.
கலாய்த்த வீரேந்தர் சேவாக்
இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தன் பங்குக்கு ஆதிபுருஷை கழுவி ஊற்றியுள்ளார். ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர் அதில், ‘ ஆதிபுருஷைப் பார்த்ததும் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று தெரிய வந்தது’ என நக்கலாக பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.