பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸப் நிறுவனம் தனது புதிய நிர்வாகியாக முன்னாள் அமேசான் நிர்வாகியை தேர்வு செய்துள்ளது.
பிரபல வாட்ஸப் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டு செயல்படுகிறது. அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸப் , கடந்த 2018 ஆம் ஆண்டே வாட்ஸப் பேமண்ட் குறித்த சோதனையை தொடங்கிவிட்டது. ஆனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் பயனாளர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் வாட்ஸ்ப் பேமண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து பயனாளருக்குமான வாட்ஸப் பேமண்ட் குறித்த அனுமதியை வழங்குவதற்கு இந்திய அரசு தாமதித்து வந்த நிலையில். பலமுறை பரிசீலனை செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதற்கான ஒப்புதலை வழங்கியது. இந்த வாட்ஸப் பேமண்ட் சேவையில், பயனாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை இணைத்து, ஒருவருக்கு ஒருவர் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். அதேபோல வாட்சப் வர்த்தக கணக்கின் மூலம் பொருட்களை விற்று நேரடியாக வாட்ஸப் மூலம் பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது வாட்ஸப் பேமண்ட் சேவையை மேம்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ள அந்த நிறுவனம், புதிய நிர்வாகியாக மனேஷ் மகாத்மே என்பவரை நியமித்துள்ளது. இவர் வாட்ஸப் பேமண்டின் தலைமை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மனேஷ் , முன்னதாக அமேஷான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் அங்கு அமேசான் பே நிறுவனத்திற்கான தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்களை வழிநடத்தியுள்ளார்.முன்னதாக சிட்டி குரூப் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். இவரை வரவேற்று வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ இனி வாட்ஸப் பேமண்ட் மூலம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேமண்ட் வணிகத்தை வளர்க்கவும் மனேஷ் மகாத்மே உறுதுணையாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வாட்ஸப் நிறுவனம், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிரபல ஜியோ நிறுவனத்தின் பேமண்ட் தளத்தில் தங்களை இணைத்துக்கொள்வதற்காக கிட்டத்தட்ட கிட்டத்தட்ட ரூ. 42,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தியது. முன்னதாக ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற நிதி சேவைகளை வழங்கும் முயற்சியிலும் வாட்ஸப் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டே வாட்ஸப் இந்திய தலைவர் அபிஜித் போஸ் இதற்காக வங்கிகளுடனான தனது கூட்டாட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் தற்பொழுது பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையான பேமண்ட் சேவைகளை வழங்கி வருகின்றன. ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது