பொதுவாக உடல் பருமனான யாராவது எடையைக் குறைத்தால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். இது எப்படி சாத்தியம் என அவர்களிடமே பேசி டிப்ஸ் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒரு அதிபர் உடல் எடையைக் குறைத்தது அந்நாட்டு மக்கள் பலருக்கு கவலையை உண்டாக்கியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, விமர்சனங்களுக்கு பெயர் போன வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். 


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றாலே கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்ற வார்த்தைகளும் கூடவே நினைவில் வந்து ஒட்டிக்கொள்ளும். இன்னும் ஒருபடி மேலாக அவரின் அரசியல் பாணியை சர்வாதிகாரம் என்றே சர்வதேச அரங்கம் விமர்சிக்கிறது. நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருப்பார் கிம். ஏன்? வடகொரியாவில் கொரோனா என்ன நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியாது.  இதுவரை தங்கள் நாட்டில் 25986 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் ஆனால் இதுவரை ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்கிறது வடகொரியா. நாட்டின் தகவலையே ரகசியமாக கட்டிக்காக்கும் கிம், தன்னுடைய உடல் நிலை குறித்து மூச்சுவிடுவாரா? அதனால்தான் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது பல செய்திகள் வெளிவருகின்றன. அதன்படி தற்போதைய ஹாட் டாப்பிக் கிம்மின் உடல் எடை.




கையில் கட்டியிருக்கும் கடிகாரம் இறுக்கிக் கொண்டிருக்க, பருத்த முகத்துடன் இருப்பார் கிம். ஆனால் சமீபத்திய அவரது புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள வைத்துள்ளது. அவரது பருத்த முகம் பெருமளவில் மெலிந்துபோய் உள்ளது. அவரது உடல் எடையை அதிகளவில் குறைத்துள்ளார். கிட்டத்தட்ட 10 முதல் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.அவரது மெலிந்த உடலைப் பார்த்து அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். கிம்முக்கு உடல்நிலை பிரச்னை காரணமாக உடல் எடை குறைந்ததா என கவலை தெரிவித்துள்ளனர். கிம் உடல்நிலை குறித்து கவலையடைய சில காரணங்களும் உள்ளன. புகையும், மதுவும் கிம்முக்கு வழக்கமான ஒன்றுதான். கிம்மின் தந்தையும், தாத்தாவுமே இதய நோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்தார்கள். இந்த வம்சாவளி சிக்கலில் கிம் சிக்கி இருப்பாரா என்பதே அவரது ரசிகர்களின் கவலை.




ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், உடல் எடையை கிம் ஆரோக்கியத்தை கணக்கிட்டே குறைத்திருப்பார். மற்றப்படி அவருக்கு உடல் பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை. அப்படி உடல் பிரச்னை என்றால் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு அவர் வந்திருக்கவே மாட்டார் என்றார். தொடர்ந்து உடல்நிலை தொடர்பான கணிப்புகளில் சிக்கும் கிம், இந்த முறை உடல் எடை மெலிந்ததால் கவனிக்கப்பட்டுள்ளார்.


Imran Khan on Bollywood: பாலிவுட் படங்களை காப்பி அடிக்காதீங்கப்பா... இளம் இயக்குநர்களுக்கு பாக்., பிரதமர் அட்வைஸ்..!