சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம், நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆகிய தேதிகள் வரையில், 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பில் இருக்கிங்களா என்ற கேள்வி இன்று சந்திக்கும் எவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொள்வார்கள்.
வெறும் தகவல்களை பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதி, ஆவணங்களை அனுப்பும் வசதி என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் 8.72 லட்சம் கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட 23.28 லட்சம் கணக்குகளை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பயனர் பாதுகாப்பு அறிக்கையில்’ , “செப்டம்பர் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 2,685,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில், 8,72,000 கணக்குள் முன்கூட்டியே முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்கள் புகார்கள், போலி கணக்கு, தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளை கடுமையாக்கியது. அதன்படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூகவலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட வேண்டும்.
பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 666 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் 23 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறுகையில், “வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களுக்கு சிறந்த சேவை வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெறுப்பு பேச்சு, போலி செய்தி பகிர்தல் ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது “எனத் தெரிவிக்கப்படுள்ளது.