WhatsApp : இந்தியாவில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெடா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன.


குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.


இது ஒரு பக்கம் இருக்க, பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை சமீபத்தில் வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக மலேசியா, கென்யா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து இந்த அழைப்புகள் வருகின்றன. மேலும் இதுபோன்ற மோசடி கும்பல் பெரும் நிறுவனங்களின் பெயர்களில் உலவுகின்றனர். வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ஏமாற்றி பணம் பெறுகின்றனர்.


74 லட்சம் கணக்குகள் முடக்கம்


இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 74 லட்சத்து 52 ஆயிரத்து 500 இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. அதில் 2,46,97,000 பயனர்களிடம் இருந்து எந்த விளக்க அறிக்கையும் வருவதற்கு முன்பே வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் பயனர்களிடம் இருந்து 4,377 புகார்களை பெற்றுள்ளது. இருப்பின்னும மொத்த புகார்களில் 5 சதவீதம் மட்டுமே  நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் குறைகள் மேல்குறையீட்டுக் குழு (GAC) இரண்டு உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், நிறுவனம் இரண்டையும் கடைப்பிடித்ததாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. பயனர்களின் பாதுகாப்பை கருதி இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கணக்குகள் மத்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப  விதிகளை மீறி செயல்பட்டதற்காக முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் வெளிவந்த அப்டேட்


இதற்கிடையில், வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.