விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள எழாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தபிள்ளை (வயது 60). ஆடுகளை வளர்த்து வரும் விவசாயியான இவர் நேற்று காலை 10 மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்ல ஆயத்தமானார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு வாங்குவது போல் கோவிந்தபிள்ளையிடம் ஆட்டின் விலை குறித்து விசாரித்தார். உடனே அவர் இப்போது ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்ல இருப்பதால் பிறகு வருமாறு கூறிவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டி அருகில் மறைத்து வைத்துவிட்டு ஆடுகளை ஓட்டிச்சென்றார்.


இதை நோட்ட மிட்ட மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டு மீண்டும் பகல் 12 மணியளவில் கோவிந்தபிள்ளையின் வீ்ட்டுக்கு வந்தார். பின்னர் மீ்ட்டர் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்த மர்மநபர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தார். இந்த நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிய கோவிந்தபிள்ளை வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மேற்படி நகை, பணத்தை காணவில்லை.


விசாரணையில், ஆடு வாங்குவது போல் நடித்து மர்மநபர் வீ்ட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.8½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தப்படி சிறிது துரம் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனிடையே தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.8½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண