யூடியூப் கிரியேட்டர்கள் வீடியோக்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான கட்டுப்பாடுகளை எளிதாக்கி அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


யூடியூப்:


வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. ஆனால் யூடியூப்பை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது என்பது அரிதாக மாறியுள்ளது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு என்பதை தாண்டி, பலரின் வாழ்வாதாரமாகவும் யூடியூப் மாறியுள்ளது. இதற்காகவே தனக்கென சட்ட, திட்டங்களை வகுத்து, தங்களது தளத்தில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கு என பல கட்டுப்பாடுகளையும் யூ-டியூப் நிறுவனம் விதித்துள்ளது. அதோடு, தங்களது வீடியோக்கள் மூலம் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்ட, அந்த கிரியேட்டர் குறிப்பிட்ட தகுதிகளை பெற்று இருக்க வேண்டி உள்ளது. அதன்படி, கடந்த சில வருடங்களாக இருந்த அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்வது கடினமாக இருந்த நிலையில், கிரியேட்டர்களின் நலன் கருதி அவற்றை தளர்த்தி யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 


வருவாய் ஈட்ட முந்தைய அடிப்படை தகுதிகள்:



  • கண்டண்ட் கிரியேட்டரால் உருவாக்கப்பட்ட சேனல் 1000-க்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று இருக்க வேண்டும்

  • 365 நாட்கள் எனும் காலவரையறுக்குள் 4000 பார்வை நேரங்களை பெற்று இருக்க வேண்டும்

  • அல்லது ஷார்ட்ஸ் மூலமாக ஒரு கோடி பார்வைகளை பெற்று இருக்க வேண்டும்


புதிய தகுதிகள் என்ன?



  • கண்டண்ட் கிரியேட்டரால் உருவாக்கப்பட்ட சேனல் 500-க்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று இருக்க வேண்டும்

  • 365 நாட்கள் எனும் காலவரையறுக்குள் 3000 பார்வை நேரங்களை பெற்று இருக்க வேண்டும்

  • அல்லது ஷார்ட்ஸ் மூலமாக 30 லட்சம் பார்வைகளை பெற்று இருக்க வேண்டும்

  • குறிப்பிட்ட 90 நாட்களில் பப்ளிக் வீடியோக்கள் மூன்றை பதிவிட்டு இருக்க வேண்டும்


எங்கெங்கு அமல்:


புதிய தகுதி அடிப்படையிலான விதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, படிப்படியாக பிற நாடுகளில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழல் வரையில் இந்த புதிய விதிகள் இந்தியாவில் எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


யாருக்கு பலன்:


புதிய தளர்த்தப்பட்ட விதிகள் மூலம், யூடியூபில் உள்ள சிறிய கண்டண்ட் கிரியேட்டர்களும் இனி வருவாய் ஈட்ட முடியும் எனும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், விளம்பரம் மூலம் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்ட தங்களது பார்வையாளர்களை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என யூடியூப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.