மாநிலங்களில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் இருப்பு நிலையையும் மாநில அரசுகளால் இருப்பு வரம்புகள் அமலாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (14.06.2023) நடைபெற்றது.  மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை, மத்திய கிடங்குக் கழகம், மாநில கிடங்குக் கழகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமை தாங்கினார். துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் பதுக்கலைத் தடுக்கவும், இவை நுகர்வோருக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இவற்றுக்கான இருப்பு வரம்புகள் 2023 ஜூன் 2-ஆம் தேதி அன்று  நுகர்வோர் நலத்துறையால் நிர்ணயிக்கப்பட்டன.


இதன்படி, 2023 அக்டோபர் 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும் சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவர்கள் தங்களின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்ற இணையப் பக்கத்தில் அறிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், கையிருப்பு நிலைமைகளை சரிபார்த்து இருப்பு வரம்பு உத்தரவை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  


துவரம் பருப்பின் கையிருப்பை மாநில அரசுகளுடன் இணைந்து கண்காணிக்க கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமையிலான குழுவை நுகர்வோர் நலத்துறை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் கையிருப்புப் பற்றிய கள நிலவரங்களை அறிவதற்கு 12 மூத்த அதிகாரிகளையும் நுகர்வோர் நலத்துறை நியமித்துள்ளது.