Greece Boat Accident : லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்த படகு கவிழ்ந்து சுமார் 79 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபந்து கிரீஸின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை அதிகாலை நடந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 79 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் எகிப்தைச் சேர்ந்த 30 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரும், சிரியாவைச் சேர்ந்த 35 பேரும், இரண்டு பாலஸ்தீனியர்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . மேலும், 17,000 அடி ஆழம் மூழ்கிய கப்பலைக் கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெலோபொன்னீஸ் திபகற்பத்தின் தென்மேற்கில் உள்ள துறைமுகமான பிலோஸின் தெற்கே உள்ள பகுதியில் இரவு முதல் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புலம்பெயர்ந்தோர் 400 பேர் வரை படகில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கப்பலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக தெரிகிறது. இந்த கோர விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் கிரீஸ் நாட்டின் பிரதமர் ஐயோனில் சர்மாஸ் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தார். மேலும் இதுகுறித்து கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”விபத்து நடந்த கப்பலில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்று துல்லியமாக மதிப்பிட முடியாது. படகு சுமார் 17,000 அடி வரை படகு கவிழ்ந்ததாக தெரிகிறது. ஒரு பக்கம் படகு கவிழ்ந்து 10 நிமிடங்களில் கடலில் மூழ்கியுள்ளது.
மேலும், படகில் அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. இதுவரை 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆறு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், ஒரு கடற்படை போர் கப்பல், ஒரு ராணுவ போக்குவரத்து விமானம், ஒரு விமானப்படை ஹெலிகாப்டர், பல தனியார் கப்பல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு நிறுவனமான Frontex இன் ஆளில்லா விமானம் ஆகியவை மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
மேலும் படிக்க
Temperature: சுட்டெரித்த வெயில்..17 இடங்களில் சதமடித்த வெயில்..எங்கெல்லாம் தெரியுமா?