கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பலர் தங்களது வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக மொபைல் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு வழக்கத்தை மிகவும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கு காலங்களில் சமூக வலைத்தளங்கள் புதிய வசதிகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. உதாரணமாக ட்விட்டர் தளம் ஸ்பேசஸ் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் லைவ் ரூம் என்ற பெயரில் வீடியோ சேட் வசதியை அறிமுகம் செய்தது. மேலும் டெலிகிராம் செயலியில் ஆடியோ மேசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது க்ளப் ஹவுஸ் என்ற செயலி மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு மீண்டும் ஆன்லைன் ரேடியோ கேட்பது அல்லது போட்காஸ்ட்கள் கேட்பது வழக்கமாக தொடங்கியுள்ளது. அதற்காக தான் ட்விட்டர் தளம் தனது ஸ்பேசஸை விரைவாக அறிமுகம் செய்தது. அதை அறிமுகம் செய்தவுடன் பலர் ஸ்பேசஸில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசியும் கருத்துகளை பரிமாறியும் வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் இந்த க்ளப் ஹவுஸ் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்ளப் ஹவுஸ் என்றால் என்ன?
க்ளப் ஹவுஸ் செயலி என்பது ஒரு ஆடியோ முறையில் கலந்துரையாடும் ஒரு வசதி தான். கிட்டதட்ட ட்விட்டர் ஸ்பேசஸ் போல தான் இதுவும். அதேபோல் இதிலும் ஒருவர் உரையாடலை நடத்தினாலும், யார் பேச வேண்டும் என்று தீர்மானிக்கலாம். மேலும் யாரை கேட்க அனுமதிக்கலாம் என்றும் தீர்மானிக்கலாம்.
ட்விட்டர் ஸ்பேசஸிற்கும் கிளிப் ஹவுஸிற்கும் என்ன வித்தியாசம்?
ட்விட்டர் ஸ்பேசஸ் நடத்த தான் சில கட்டுப்பாடுகள். ஆனால் ஸ்பேசஸில் சேர்ந்து உரையாடலை கேட்க பேச ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். இங்கும் ஸ்பேசஸ் நடத்துபவர் அனுமதி அளித்தால் தான் கேட்கவும் பேசவும் முடியும். ஆனால் இந்த க்ளப் ஹவுஸ் சற்று வித்தியாசமானது. அதில் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே க்ளப் ஹவுஸில் இருக்கும் நபர் உங்களுக்கு இன்வைட் அளிக்காமல் அதில் நீங்கள் உரையாடல்களில் கலந்து கொள்ளவோ கேட்கவோ முடியாது.
க்ளப் ஹவுஸ் செயலியில் எப்படி சேர்வது?
க்ளப் ஹவுஸ் செயலியை நீங்கள் ஆன்டிராய்ட் அல்லது ஐபோனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின்னர் உங்களுடைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை கொடுத்து ரிஜிஷ்டர் செய்து கொள்ளலாம். இவை கொடுக்காமல் ட்விட்டர் கணக்கின் விவரம் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதை பயன்படுத்த ஏற்கெனவே இருக்கும் பயனாளரிடம் இருந்து இன்வைட் வர வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஒரு க்ளப் ஹவுஸ் பயனாளருக்கு இரண்டு புதிய நபர்களுக்கு இன்வைட் அளிக்க முடியும்.
க்ளப் ஹவுஸ் கலந்துரையாடல் ரெக்கார்டிங் செய்ய முடியுமா?
ட்விட்டர் ஸ்பேசஸை போல் இதிலும் கலந்துரையாடல் முடிந்துவிட்டால் அதை மீண்டும் கேட்கும் வசதி இல்லை. ஆனால் ஒரு கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது அது குறித்து யாராவது புகார் தெரிவித்தால் அதை அந்த நிறுவனம் விசாரிக்க அந்த கலந்துரையாடலை மட்டும் பதிவு செய்து வைத்திருக்கும்.
க்ளப் ஹவுஸ் மூலம் எத்தனை பேர் உரையாடலாம்?
க்ளப் ஹவுஸ் செயலில் ஒரு உரையாடலில் 5000 பேர் வரை பங்கேற்கலாம். இந்த உரையாடலில் எந்தவித வீடியோ பயன்பாடும் செய்ய முடியாது. மேலும் இந்த தளத்தில் ஒரு ப்ரோஃபைல் போட்டோ மட்டும் வைத்து கொள்ள முடியும். மற்றப்படி இந்த செயலில் போட்டோ மற்றும் வீடியோ பயன்பாடு இல்லை.
மேலும் படிக்க: Apple to Android | ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறும் ஆப்பிள் பயனாளர்கள் - காரணம் என்ன?