வோடபோன் ஐடியா (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆகும். சிறந்த நெட்வொர்க் கவரேஜை வழங்காததற்காக டெல்கோவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் நிறுவனம் ஆகும், ஆனால் அதன் திட்டங்கள் தொழில்துறையில் மிகவும் சிறந்தவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர்கள் வழங்கும் பல அம்சங்களில், வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட அதன் போட்டியாளர்களை விட மிகச் சிறந்ததாக விளங்குகிறது. 


ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா இந்த மூன்றுமே கடந்த ஆண்டு இறுதியில் கட்டண உயர்வை அறிவித்தன. அதிரடிக் கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் மாறினர். இந்நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த வோடோபோன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கட்டண உயர்வா என பலரும் ஷாக் ஆகியுள்ள நிலையில் வேறு வழியில்லை என்கிறது வோடொபோன்.  




வோடொபோனின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ரவீந்தர் கட்டண உயர்வுக்கான தகவலை வெளியிட்டுளார். நிறுவனம் நினைத்த லாபத்தில் செல்லவில்லை என்றும், அதனால் இந்த ஆண்டில் மீண்டும் ஒரு கட்டண உயர்வு இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர், கண்டிப்பாக விலை உயர்வு இருக்கும். எப்போது இருக்கலாம் என இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. கடந்த முறை விலை உயர்வு என்பதே தாமதமாகவே செய்யப்பட்டது. இந்த முறை சரியான நேரத்தில் இருக்கும். அது இந்த ஆண்டுக்குள்ளாகவும் அல்லது 2023ஆகவும் கூட இருக்கலாம் என்றார்




கடந்த ஆண்டு கட்டண உயர்வால் பல வாடிக்கையாளர்கள் வோடோபோனை விட்டு வெளியேறினர்.  அதனால் அந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26.98 கோடியில் இருந்து 24.72 கோடியாக குறைந்தது. அதன்படி டிசம்பர் காலாண்டில் ரூ.7230 கோடி ஒருங்கிணைந்த நஷ்டம் என கணக்குக் காட்டியது வோடோபோன். இந்நிலையில் மீண்டும் கட்டண உயர்வுக்கான திட்டத்தில் இறங்கியுள்ளது.


இதற்கிடையே 5ஜி நெட்வொர்க்கை கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 5ஜி தொழில்நுட்பம் வந்தால் அதற்கேற்ப விலை உயர்வும் இருக்கலாம். இந்தியாவிலேயே முதன்முறையாக 5ஜி அலைக்கற்றை சேவையை தாங்கள் பரிசோதித்துள்ளதாகக் சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் கூறியது.  இந்த 5ஜிக்கும் தற்போது அதிகரிக்கப்படும் கட்டணத்துக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இருக்கும். அப்போது அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டா போட்டி போட்டு ஏலம் எடுக்கும். அதற்காகத் தான் இப்போது எல்லா நிறுவனங்களும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன.