உலக நாயகன் என திரையுலகாலும், சினிமா ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். விவரம் தெரிந்தது முதலே கேமரா முன்பு நடிக்கத் தொடங்கிய கமலின் நடிப்பு பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வித விதமான கெட்டப்புகள், பாடகர், இயக்குநர் என கமல் தொடாத பகுதி சினிமாவில் இல்லை என்று கூட சொல்லலாம். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அந்த இடத்தோடு நின்றுவிடவில்லை. இந்திய சினிமாவில் பெரிய ஆளுமை என்றாலும் சின்னத்திரையிலும் கால் பதித்தார் கமல்.
சின்னத்திரைக்கு கமலா?என ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் துபுஜுகு, துபுஜுகு பிக் பாஸ் என வீட்டு டிவியை தட்டினார் கமல். பிக் பாஸ் மூலம் கமல்ஹாசனின் சின்னத்திரை பிரவேசமும் வெற்றிவாகை சூடியது. சினிமா, சின்னத்திரை என பயணம் என்றாலும் மறுபக்கம் அரசியலிலும் குதித்தார் கமல்ஹாசன். பேசிக்கொண்டிருக்க இது நேரமல்ல என படாரென அரசியல் பிரவேசம் எடுத்தார். கட்சிப்பெயர், கூட்டம், கொடி என பரபரவென தொடங்கிய மக்கள் நீதிமய்யம் கடந்த சட்ட மன்றத் தேர்தலையும் சந்தித்தது. இந்த வரிசையில் பிஸினஸ் மேனாகவும் ஆனார் கமல்.
அமெரிக்காவின் சிகோகாவில் கதர் தொடர்பான தொழிலை தொடங்கினார் கமல்ஹாசன். இது தொடர்பாக அப்போது அவர் பதிவிட்ட ட்வீட்டில், தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம் என குறிப்பிட்டிருந்தார். தறி ஆடைகளை விற்பனை செய்வது தொடர்பான பிஸினஸில் கால்பதித்தார் கமல். அதன்படி ஆன்லைன் கதர் ஆடை பிஸினஸை குடியரசுத் தினமான இன்று தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். தன்னுடைய ஆடை விற்பனை இணையப்பக்கத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,'ஆடைகளை இன்று முதல் ஆன்லைனில் வாங்கலாம். சர்வதேச விற்பனையும் விரைவில் தொடங்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
kamalhaasan House Of Khaddar என்று பெயரிப்பட்டுள்ள ஆசை விற்பனை இணையப்பக்கம் KHHK என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஆடைகள் விற்பனைக்கு உள்ளன. ரூ.8ஆயிரம், 9 ஆயிரம் என விலை கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் முதலே ஆடை விலை தொடங்குகிறது. கமல்ஹாசனின் ஆன்லைன் ஜவுளிக்கடையில் சாமானியர்களுக்கு வேலை இல்லை என்பதுபோல விலை தலைசுற்ற வைப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர். அதேவேளையில் இது ஒரு இண்டர்நேஷ்னல் ஆன்லைன் பிஸினஸ் என்பதாலும், கதர் மற்றும் பேஷன் என்ற முறையிலும் விலை இருப்பதாக சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்