சாமானியர்களையும் சென்றடையும்  படைப்புகள்தான் ஒரு சிறந்த வளர்ச்சியாக இருக்க முடியும். அப்படியான வளர்ச்சியை கண்டுள்ளது, பிரபல காணொளி தளமான யூடியூப்  நிறுவனம். இன்று அனைவருக்குமான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டவும் யூடியூப் வழிவகை செய்துகொடுத்துள்ளது. இன்றைய இளைஞர்கள் பலருக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் யூடியூப் சேனல் பக்கத்தில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸை பெற்று தமிழகத்தில் முதல் யூடியூப் டைமண்ட் பட்டனை பெற்றுள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட  கிராமத்து இளைஞர்கள். அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  சாமானியர்கள் அடையும்  வெற்றி  எப்போதுமே நாம் அடையும் வெற்றியை போன்றதுதானே! சரி இந்த யூடியூப்பில் எதற்காக இந்த பட்டன்கள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டன்களில் எத்தனை வகை உள்ளது என்பதை காணலாம்



ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர் தன் வீடியோ மூலமாக பெறும் சப்ஸ்கிரைபர்ஸே அவர்களின் வருமானத்தை நிர்ணயம் செய்யும். அதனால்தான் அனைவரும் ”எங்க வீடியோவ மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க “ என்ற வார்த்தை அடிக்கடி கூறுவார்கள்.  அப்படி படிப்படியாக பெறும் சப்ஸ்க்ரைபர்ஸ் குறிப்பிட்ட நிலையை அடையும் பொழுது அவர்களுக்கு, யூடியூப் நிறுவனம் மூலம் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதுவே யூடியூப் ப்ளே பட்டன் என அழைக்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு நீங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. 


ப்ளே பட்டன் வகைகள் :


1. சில்வர் ப்ளே பட்டன்


இந்த விருதினை பெறுவதற்கு சேனல் வைத்திருக்கும் நபர் 100K சப்ஸ்க்ரைபர்ஸை பெற்றிருக்க வேண்டியது அவசியம். இது பொதுவாக பெரும்பாலான யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு கிடைத்துவிடும். இது பார்ப்பதற்கு சில்வர் நிறத்தில் இருக்கும் . அதன் நடுவில் யூடியூப் ப்ளே ஐகான் இடம்பெற்றிருக்கும்



2.கோல்ட் ப்ளே பட்டன் :


இந்த விருது சில்வர் ப்ளே பட்டனை விட மேம்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த விருதினை  பெற  1 மில்லியன்   சப்ஸ்க்ரைபர்ஸை பெற்றிருக்க வேண்டும். இது தங்க முலாம் பூசப்பட்ட  ப்ளே பட்டனை சுமந்திருக்கும்.



3.டைமண்ட் ப்ளே பட்டன் :


இது 10 மில்லியன் சப்ஸ்க்ரைபரஸ் பெற்ற சேனலுக்கு வழங்கப்படுகிறது.பார்ப்பதற்கு மினு மினுப்பாக வைரம் போலவே மின்னும் வகையில் உருவாக்கியிருப்பார்கள் . பல முக்கோணங்களை அடக்கி , மையத்தில் ஒரு யூடியூப் ப்ளே பட்டன் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் . கடந்த 2020 ஆண்டு கணக்கின் படி  655 சேனல்கள் மட்டுமே இந்த டைமண்ட் ப்ளே பட்டன் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுதான் நமது கிராமத்து இளைஞர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.



4. கஸ்டம் ப்ளே பட்டன் (Custom play button)


இது 50 மில்லியன்  சப்ஸ்க்ரைபர்ஸை பெற்ற சேனலுக்கு வழங்கப்படும் விருது. இது ரூபி ப்ளே பட்டன் என்றும் அழைக்கப்படுகிறது. PewDiePie என்ற யூடியூபருக்கே இந்த விருது முதன் முதலில் கிடைத்துள்ளது. அவரே இதற்கு ரூபி ப்ளே பட்டன் என பெயர் வைத்துள்ளார்.PewDiePie, T- series உள்ளிட்ட 11 சேனலுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.




5. ரெட் டைமண்ட் ப்ளே பட்டன் :


 இது 100 மில்லியன்  சந்தாதார்களை பெற்ற யூடியூப் சேனலுக்கு வழங்கப்படுகிறது. இது அடர் சிவப்பு நிற க்ரிஸ்டல் போன்ற அமைப்பில் ப்ளே பட்டனை சுமந்திருக்கும் விருது. இந்த விருதினை முன்னதாக கஸ்டம் ப்ளே பட்டனை பெற்ற  PewDiePie, T- series ஆகிய சேனல்கள் மட்டுமே பெற்றுள்ளன.  PewDiePie ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டும்,   T-series  மே 2019 ஆம் ஆண்டும் இந்த ரெட் டைமண்ட் வழங்கப்பட்டது.



மேல் குறிப்பிட்ட விருதுகள் அல்லாமல்  தொடக்க நிலையில் இருக்கும் சேனல்களுக்கு கிராஃபைட் , ஓபல், ப்ரோன்ஸ் என்ற அடிப்படையில் சில சலுகைகளையும் வழங்குகிறது யூடியூப்.