தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிறுகச்சிறுக தளர்த்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மாவட்டங்களை வகை பிரித்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.




இன்று முதல் தளர்வுகள் பாகுபாடு இன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு சில மாவட்டத்திற்கு கோவில்கள் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக காணப்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மதுபான கடைகள் மற்றும் கோவில்கள் திறக்க தடை நீடித்து வந்தது. 




இந்நிலையில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து கடந்த 71 நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டிருந்த  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ஒருசில மது பிரியர்கள், சில மாவட்டங்களில் மதுபான கடை முன்பு பட்டாசு வெடித்தும், கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்தும் கொண்டாடி தங்கள் 2 மாத தவத்தை கலைத்துக்கொண்டனர்.




கடந்த இரண்டு மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காத மது பிரியர்கள் தங்களை மது போதையில் வைத்துக்கொள்ள கள்ளச்சாராயத்தை நாடுவதும், தாங்களாகவே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன வேதி பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பது போன்ற பல்வேறு வகையான பாதைகளை குறுக்குவழியில் தேடி தங்கள் உயிர்களை இழந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் சென்று மதுபானங்கள் வாங்கி வந்தனர்.




இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மயிலாடுதுறை உட்பட 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மதுபானக் கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சில மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து கடைக்கு சுற்றி தேங்காய் உடைத்து, வழிபட்டு மது பானங்களை  ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.




இந்த சூழலில் இரண்டு மாதங்களை கடந்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளும் எந்த வித ஆரவாரமின்றி காலியாக காணப்பட்டு வருகிறது. ஓரிருவர் மட்டுமே மதுபானங்களை வாங்க வந்து செல்கின்றனர். அனைத்து கடைகளிலும் குறைந்த அளவிலான கூட்டமே காணப்படுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக விலகலை பின்பற்ற டாஸ்மார்க் கடை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொடைகள் அனைத்தும் வைத்தது வைத்தது போல் உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட காவலர்களும் கூட்டம் இல்லாததால் பணிச்சுமை இன்றி காணப்பட்டனர். வாரத்தின் முதல் நாள் என்பதால், கூட்டம் குறைவாக இருப்பதாகவும், மாலையில் கூட்டம் வரும் என எதிர்பார்ப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு மேலாக மது பானம் அருந்தாத பலர் மது பழக்கத்தை விட்டு விட்டதாகவும். அதனால் தான் கூட்டம் இல்லை என பரவலாக பேசப்படுகிறது.