Twitter x: பணம் செலுத்தினால் தான் ட்விட்டரை பயன்படுத்துவது போன்ற புதிய மாற்றத்தை எலான் மஸ்க் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளார். ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புதிய மாற்றம்:
இதன்படி மாதந்தோறும் ரூ.566 இந்தியாவில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது வரை தனிநபர்கள் அதாவது ப்ளூ டிக் அல்லாதவர்கள் பணம் செலுத்தாமல் ட்விட்டரை பயன்படுத்த முடியும். இதனால், கருத்து பதிவிட, கமெண்ட் செய்யவும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில் தான், பயனாளர்களுக்கு ஒரு குண்டை போடுள்ளார் எலான் மஸ்க். அதாவது, ட்விட்டரை பயன்படுத்தவே கட்டணம் செலுத்த வேண்டியதை அவசியமாக்கியிருக்கிறார். சந்தா கட்டணம் செலுத்தினால் தான் கருத்து பதிவிடவோ, கமெண்ட் போடவோ முடியும். இதற்கு ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ட்விட்டர் கணக்குகளை தடுக்கவும், போலியானவர்கள் ட்வீட் மற்றும் கமெண்ட் போடுவதை தடுக்கவும் இந்த மாற்றத்தை எலான் மஸ்க் கொண்டு வந்துள்ளார்.
இந்த புதிய மாற்றம் அக்டோபர் 17ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு 'நாட் எ பாட்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு கட்டணம் செலுத்தினால், ட்விட், கமெண்ட், லைக், புக்மார்க்கிங் செய்யவோ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல், ஆண்டு கட்டணம் செலுத்தாதவர்கள் இவ்வளவு ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையையும் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த புதிய மாற்றம் இந்தியாவில் எப்போது வரும் என்ற தகவல் வெளிவரவில்லை.
மேலும் படிக்க
USA and War: ஆதிக்க ஆசை, ஆயுத விற்பனையில் கொள்ளை லாபம் - உலக நாட்டாமையாக அமெரிக்கா ஆசைப்படுவது ஏன்?