USA and War: எந்த நாட்டில், எந்த கண்டத்தில் போர் அல்லது மோதல் வெடித்தாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளின் பெயர் அடிபடுவது ஏன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
போர் வரலாறு:
கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் வரையிலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சு போன்ற வல்லரசு நாடுகளின் பெயர்கள் அதிகம் அடிபடுவது தொடர்கதையாகி வருகிறது. காரணம், வல்லரசு நாடுகள் இது போன்ற போர் சூழலில் தங்களது புவிசார் அரசியல், வணிக லாபம் ஆகியவற்றை கருத்திக் கொண்டு தான், தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. உலகளவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பொதுக் கருத்துத் தளங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பயன்படுத்தி வருகின்றன. அதோடு, மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்ற வார்த்தைகள் மூலம் தங்களது சர்வதேச அரசியலை முன்னெடுக்கின்றன.
போர் வரலாற்றில் அமெரிக்கா:
இந்த வல்லரசு நாடுகளில் முதன்மையானதாக இருப்பது அமெரிக்கா. கடந்த 1776ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி அந்நாடு சுதந்திரமடைந்தது. அதன் பிறகு கடந்த 240-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், அமெரிக்கா வெறும் 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு தான் எந்தவித போரிலும் ஈடுபடவில்லை, என மனித உரிமைகள் ஆய்வுகளுக்கான சீனக் கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து 2001 ஆம் ஆண்டு வரை, உலகளவில் 153 பிராந்தியங்களில் நடந்த 248 ஆயுத மோதல்களில், 201 அமெரிக்காவால் தொடங்கப்பட்டவை எனவும், மொத்த எண்ணிக்கையில் 81 சதவிகிதம் என்றும் அந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
வல்லரசு நாடுகளின் அரசியல் நிலைப்பாடு
ஹிட்லர் காலத்தில் இருந்து தற்போது வரை நடைபெற்று வரும் போர்களால், படையெடுப்புக்கு ஆளான நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழக்க, கோடிக்கணக்கானோர் சொந்த நாடுகளை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வல்லரசு நாடுகள் எடுக்கும் சில சுயநலம் சார்ந்த நிலைப்பாடுகளால் பல்வேறு பிராந்தியங்களிலும் கொந்தளிப்பு மற்றும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் அமெரிக்காவை தான், பல நட்பு நாடுகளும் பின்பற்றுகின்றன. இதனால், அவர்களின் நிலைப்பாடு என்பது சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபப்டுகிறது.
போர்கள் தூண்டிவிடப்படுன்றவா?
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அடங்கிய நேட்டோவின் அதிகாரத்தை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது, இணங்கி செயல்படாத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, மற்ற நாடுகளை ஏதேனும் ஒரு பக்கத்தை தேர்வு செய்ய வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் வல்லரசு நாடுகள் தொடர்ந்து தங்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்திக் கொள்கின்றன என எதிர்தரப்பு நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் ஏற்படும் பதற்றங்களும் போருக்கு காரணமாகின்றன. உதாரணமாக ரஷ்யாவின் எல்லையில் உள்ள உக்ரைன் நாடானது, நேட்டோ அமைப்பில் இணைய முற்பட்டது. அதனை கைவிட வலியுறுத்தியும் மறுத்ததால் தான், உக்ரைன் மீது ரஷ்யா போரை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று, உலகளாவிய ஆதிக்கத்திற்காக அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் போருக்கு காரணமாக அமைகின்றன என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
போர்குணம் வாய்ந்த அமெரிக்கா..!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒவ்வொருவரும், தனக்கென ஒரு போரை சந்தித்துள்ளனர். சர்வதேச அளவில் நிகழும் கட்டாய வன்முறையின் மூலம் நாட்டின் உற்பத்தி மற்றும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா நம்புவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய ஆதிக்கத்திற்காக அமெரிக்காவும், சோவியத் யூனியனும் பனிப்போரில் ஈடுபட்டன. அதன்பிறகு சர்வதேச பிரச்னைகளில் தலையீடு, போர்கள், ஊடுருவல் ஆகிய நடவடிக்கைகளிலும் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா அதிகளவில் ஈடுபடுவதாக பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
வடிவமைக்கப்படும் போர்கள்?
மற்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகளை பயன்படுத்தி, அமெரிக்கா போர்களைத் தூண்டிவிடுவதாக சர்வதேச உறவு நிபுணர்கள் மற்றும் ராணுவ பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1950-53ம் ஆண்டுகளில் நடைபெற்ற கொரிய போர் இதற்கு முதல் உதாரணமாக கூறப்படுகிறது. கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் போர்களுக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணம் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் உறுதிப்பாடு:
சர்வதேச பிரச்னைகள் எதுவானாலும் முடிவுக்கு தங்களை நாட வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. தங்களை தாண்டி எந்தவொரு நாடும் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் அமெரிக்கா தெளிவாக இருப்பதை வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. அதற்கு உதாரணமாக கிரெனடா தீவு கலவரத்தை கூறலாம். 1983ம் ஆண்டு கிரெனடா தீவில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. அப்பகுதியின் முன்னாள் துணைப் பிரதமரும் சோவியத் யூனியனுக்கு ஆதரவான அரசியல்வாதியுமான பெர்னார்ட் கார்ட் நாட்டின் புதிய தலைவரானார். இதைதொடர்ந்து கிரெனடாவில் உடனடியாக தரையிறங்கிய அமெரிக்கப் படைகள் தலைநகர் செயின்ட் ஜார்ஜ் விமான நிலையத்தைக் கைப்பற்றின. 10 நாட்களுக்குள் 1,10,000 மக்கள் தொகை கொண்ட கிரெனடாவின் மொத்தக் கட்டுப்பாட்டை அமெரிக்கா கைப்பற்றியது. வாஷிங்டனின் உதவியுடன் புதிய அமெரிக்க சார்பு அரசாங்கம் நிறுவப்படும் வரை அவர்கள் அங்கிருந்து பின்வாங்கவில்லை.
போரின் மூலம் கொள்ளை லாபம்..!
போர்கள் மூலம் ஏராளமான உயிரிழப்புகள் ஒருபுறம் ஏற்பட, மறுமுனையில் வல்லரசு நாடுகள் தொடர்ந்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. நட்பு நாடுகளுக்கு போருக்கான ஆயுதங்களை வழங்குவது மட்டுமின்றி, அதற்கு பிறகான மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றன. இதிலும் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் 10 பெரிய ஆயுத உற்பத்தியாளர்களில் ஆறு பேர் அமெரிக்காவை சேர்ந்தவை தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகளை காப்பது யார்?
உலகில் எங்கு வன்முறை வெடித்தாலும் அங்கு மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் வல்லரசு நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்ற போர்களில் தான் அதிகப்படியான போர்க்குற்றங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் போர்கள், 9 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை காவு வாங்கியுள்ளதாக, பிரவுன் பல்கலைக்கழகத்தின் வாட்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அஃபர்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால போரின் மூலம், சுமார் 60 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
விளம்பரங்கள் மூலம் ஜம்பம் காட்டும் அமெரிக்கா:
வல்லரசு நாடு என கூறிக்கொண்டு சர்வதேச பிரச்னைகளில் தொடர்ந்து, அதிக ஆர்வம் காட்டி வரும் அமெரிக்காவிலேயே எண்ணற்ற பிரச்னைகள் தற்போதும் நிலவுகின்றன. சுமார் 4 கோடி அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்கின்றனர் என குளோபல் டைம்ஸ் எனும் இணைய செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது. சந்தை அடிப்படையிலான மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 37 ஜனநாயக நாடுளை உள்ளடக்கிய அமைப்பு தான், OECD (The Organization for Economic Cooperation and Development ) எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு. அதன்படி, வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கான பட்டியலில் அமெரிக்கா 35வது இடத்தில் உள்ளது. அந்த 37 நாடுகளில் இளைஞர்களின் வறுமை விகிதமும் அமெரிக்காவில் தான் அதிகமாக உள்ளது. இன்றளவும் அங்கு இனவெறி நீடிப்பதை அங்கு நிகழும் சம்பவங்கள் தொடர்ந்து பறைசாட்டுகின்றன. இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்துவதிலேயே அமெரிக்க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது..