140 கேரக்டருக்குள் நறுக்கென்று விஷயத்தை சொல்ல உதவும் ட்விட்டர் பெரும்பாலான சோஷியல் மீடியா விரும்பிகளின் தேர்வு. இருந்தபோதிலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போல ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி இருந்ததில்லை. ஆனால் அதனைத் தற்போது கொண்டு வர இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ட்விட்டர் பயனர்கள் நீண்ட நாட்களாக அதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில் தற்போது அதனை ட்விட்டர் நிறைவேற்றி உள்ளது. தனது ட்வீட் ஒன்றை ட்வீக் செய்து அதில் எடிட் ஆப்ஷன் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. ட்விட்டர் ப்ளூ வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டின்படி “அதாகப்படுவது எடிட் ஆப்ஷன் நன்கு வேலை செய்கிறது என்பதை உறுதிபடுத்தவே இந்த ட்வீட்” எனக் கூறியுள்ளது.
பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யப்படும் அம்சத்தை கொண்டு வருமாறு பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி எடிட் செய்யப்படும் முறை பரிசோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரித்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் ட்விட்டரில் எடிட் ஆப்ஷனை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் நிகழாத நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் இது அனைவருக்குமானது அல்ல என்றும் செய்திகள் பரவி வந்தன. மாதம் 4.99 டாலர்கள் செலுத்தி ப்ளூ சப்ஸ்கிரைபர்களாக மாறும் கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும். அதாவது மாதத்துக்கு ரூ.397 பணம் செலுத்த வேண்டும்.
பேஸ்புக்கில் எடிட் ஆப்ஷன் இருந்தாலும் ட்விட்டரில் எடிட் என்பதே இல்லை. ஒருவேளை நீங்கள் தவறுதலாக ட்வீட் செய்தால் அதனை டெலீட் மட்டுமே செய்ய முடியும். எடிட் செய்ய முடியாது. சில நேரங்களில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், ஹேஷ்டேக் தவறுகள் போன்ற கவனக்குறைவுகள் ட்வீட்டில் வந்துவிடுவதாகவும், அதனை எடிட் செய்யும் ஆப்ஷனை கொடுக்க வேண்டுமென்றும் ட்விட்டர்வாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆரம்பம் முதலே அந்த ஒரு ஆப்ஷனை கொடுக்காத ட்விட்டர் தற்போது சந்தா அடிப்படையில் அந்த ஆப்ஷனைக் கொடுக்கிறது. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டாலும் சில நிபந்தைகளின் அடிப்படையிலேயே அந்த வசதி கொடுக்கப்படுகிறது.
ட்வீட் பப்ளிஷ் செய்யப்பட்டபின் தேவையென்றால் எடிட் செய்துகொள்ளலாம். எடிட் செய்யப்பட்ட ட்வீட் பதிவில், எடிட் செய்யப்பட்டதற்கான லேபிள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் என்ன எடிட் செய்யப்பட்டது போன்ற விவரத்தை பாலோவர்ஸ் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த ஆப்ஷன் முதலில் குறிப்பிட்ட நாட்டினருக்கு மட்டுமே கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய ட்விட்டர்வாசிகளுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனம், நீண்டகாலமாக பயனர்கள் கேட்ட எடிட் ஆப்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். முதலில் குறிப்பிட்ட நாட்டு பயனர்களுக்கு கொடுத்து அதன் தேவை மற்றும் பயனர்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உற்று நோக்க உள்ளோம். அதனடிப்படையில் விரைவில் அனைவருக்கும் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.