சமூக ஊடக தளமான ட்விட்டரில் உள்ள சில பதிவுகளை அகற்றுவதற்கான இந்திய அரசின் சில உத்தரவுகளை ட்விட்டர் ரத்து செய்ய முயலுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகளால் அவர்களது அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் இது குறித்து ஆதாரத்துடன் பகிரப்பட்டதாக அவர்கள் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் நீதித்துறையின் மறுஆய்வைப் பெறுவதற்கான டிவிட்டர் நிறுவனத்தின் இந்த முயற்சி, அந்த மோதல் போக்கின் மற்றொரு பகுதியாகக் கருதப்படுகிறது.
சுதந்திர சீக்கிய அரசுக்கு (காலிஸ்தான்) ஆதரவான கணக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் உள்ளிட்ட ட்வீட்களை நீக்குமாறு கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ட்விட்டரின் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கை குறித்து இந்தியத் தரப்பில் கருத்து கேட்கப்பட்ட நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக ஏதும் பதிலளிக்கவில்லை.சட்டப்பூர்வ நிலைப்பாடு இருந்தபோதிலும் ட்விட்டர் உள்ளிட்ட பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் அகற்றுவதற்கான கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்று இந்திய அரசு முன்பு கூறியிருந்தது.
கடந்த மாத இறுதியில், ட்விட்டர் சில உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்தியாவின் ஐடி அமைச்சகம் எச்சரித்திருந்தது. இதை அடுத்து ட்விட்டர் இந்த வாரம் இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்கியதாகச் சொல்லப்பட்டது. மேலும், நீக்கக் கூறப்பட்ட பதிவுகளின் தொகுப்பாக கிடைக்கும் பொறுப்பு விலக்குகளை இழக்காமல் இருக்கவும் ட்விட்டர் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக,
செய்திகளையோ , தகவல்களையோ’ நச்’ என்று சுருக்கமாக சொல்ல வேண்டும் என விரும்புவர்களின் தேர்வு ட்விட்டராகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர், சினிமா, விளையாட்டு என அனைத்து தரப்பினரும் கருத்து பதிவிடும் இடமாகவே இருந்து வருகிறது ட்விட்டர். ட்விட்டரில் பேசத்தொடங்கினால் அது நாட்டின் தலையெழுத்தைக் கூட மாற்றலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் அமெரிக்க தேர்தலின்போதுகூட ட்விட்டர் பதிவுகள் அதிகம் கவனிக்கப்பட்டன.இந்நிலையில் ட்விட்டரின் மீது பயனர்களின் பாதுகாப்பு தொடர்பான பகிரங்க குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு..
230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் ட்விட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் செல்போன் எண், இமெயில் ஐடியை சேமித்து வைக்கும் என தொடக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் சொன்னதை மட்டுமே செய்யாமல் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ட்விட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ட்விட்டரின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது.அதேவேளையில் ட்விட்டரை நம்பிய பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு நீதிமன்றபடியேறியது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் விசாரித்தது. ட்விட்டருக்கு எதிராக வாதாடிய ஃபெடரல் டிரேட் கமிஷன் ட்விட்டரை லெப்ட் ரைட் வாங்கியது. உங்களை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் ட்விட்டர் பல மடங்கு லாபத்தையும் சம்பாரித்துள்ளது என வாதாடியது.
ட்விட்டர் பதில்..
தொடர் குற்றச்சாட்டுக்கு மழுப்பலான பதிலையே தெரிவித்த ட்விட்டர், தனியுரிமைக்கு மதிப்பளிப்பதும், தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் எங்களுக்கு தலையாய கடமை. அதனை தீவிரமாகவே பின்பற்றுகிறோம். பெடரல் டிரேட் கமிஷனுடனும் நாங்கள் ஒத்துழைப்பை நல்குகிறோம் எனக் குறிப்பிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் ட்விட்டருக்கு அபராதத்தை விதித்துள்ளது கூட்டாட்சி நீதிமன்றம்.அதன்படி ட்விட்டர் பயனகளின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 1160 கோடி ரூபாய் ஆகும். இதனிடையே இந்த அபராதத்தொகையை செலுத்த ட்விட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.