பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. வாரத்திற்கு 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 


நடந்து முடிந்த  10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தமிழ் மொழிப் பாட வேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 


அதேபோல சமூக அறிவியல் பாடத்திலும் பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 


47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி


10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே உள்ளது. 2017-ம் ஆண்டு 31,625 மாணவர்களும் 2018-ம் ஆண்டு 33,707 மாணவர்களும் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர். 2019-ம் ஆண்டு 36,108 பேர் தேர்ச்சி பெறவில்லை. 2020, 2021ஆம் ஆண்டில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், 2022 பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்தது. 


இந்த சூழலில், தமிழகப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் சமூக அறீவியல் பாடவேளைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி குறைந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.




கல்வி இணைச் செயல்பாடுகள்


எனினும்  பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். ’ஏபிபி நாடு’விடம் பேசிய அவர், ’’மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் இந்த நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பே தோல்விக்குக் காரணம். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். 


பள்ளி வகுப்பறைகளில் கல்வி இணைச் செயல்பாடுகள் என்ற நடைமுறை ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதற்கென்று இதுவரை தனியாக பாடவேளை ஒதுக்கப்பட்டதில்லை. இந்த நிலையில், தனி பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட வேளைகளில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கவிதை எழுதுவது, பட்டிமன்றம் நடத்துவது, கட்டுரைகள் எழுதுவது என்பன உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகள் புதிய பாட வேளையில் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண