ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் புதிதாக 200 பேரை வேலையைவிட்டு நீக்கியுள்ளார். இதன் மூலம் எஞ்சியிருக்கும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னர் அதில் 7500 ஊழியர்கள் இருந்தனர். பின்னர் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அவர் சரமாரியாக கட்டவிழ்த்தார். இதனால் ட்விட்டரின் ஊழியர் பலம் வெறும் 2000 ஆனது. தற்போது கடந்த சனிக்கிழமையன்று அதிலும் 10 சதவீதம் பேரை அவர் பணி நீக்கம் செய்துள்ளார். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில் ட்விட்டரில் பணிபுரியும் 3 ஊழியர்கள் அதனை உறுதிப்படுத்தியதாகவும் ஆனால் அவர்கள் பெயர் வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு தகவலின்படி ட்விட்டர் தனது விற்பனை மற்றும் ப்ராடக்ட்ஸ் பிரிவிலிருந்து 50 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த புதிய ரவுண்ட் லே ஆஃபில் டேட்டா சைன்டிஸ்ட்டுகள், இன்ஜினியர்கள், ப்ராடக்ட் மேஜேனர்கள் பதவியில் இருப்போர் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


அதுமட்டுமல்லாது, எஸ்தர் க்ராஃபோர்டு என்ற முக்கியப் புள்ளியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் ட்விட்டரில் ப்ளூ டிக் உருவாகக் காரணமாக இருந்தவராவார். ட்விட்டர் அலுவலகத்தில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இது பேசு பொருளாகவும் ஆனது. எஸ்தர் க்ராஃபோர்டு எலான் மஸ்கின் அபிமானத்தைப் பெற்றவர் என்பதால் இந்தப் புகைப்படம் அவரை பாதிக்காது என்றுகூட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த முறை எலான் மஸ்க் அறிவித்துள்ள லே ஆஃபில் க்ராஃபோர்டு எஸ்தரும் தப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த லே ஆஃபில் இன்னொரு வேதனையான சம்பவம் என்னவென்றால் ஊழியர்கள் பலருக்கும் அவர்கள் லே ஆஃப் செய்யப்பட்டது நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. மாறாக கம்பெனி இமெயிலை திடீரென சிலருக்கு ஆக்சஸ் செய்ய இயலாமல் போயுள்ளது. அதனைத் தொடர்ந்து தான் அவர்களுக்கு அவர்கள் லே ஆஃப் செய்யப்பட்டதே தெரிந்திருக்கிறது.


அக்டோபரில் தொடங்கிய அக்கப்போர்!
 
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. 


ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். டிவிட்டர் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடினார். இந்நிலையில் இருந்த 2000 பேரிலும் 200 பேரை நேற்றோடு நீக்கிவிட்டார். இதேநிலை தொடர்ந்தால் ட்விட்டர் சமூக வலைதளமாக நீடிக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.