ட்விட்டர் ப்ளூ இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என எலன் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
எலன் மஸ்கின் ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது ட்விட்டர். முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் சீனியர் அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிய அவர் உலகளாவிய பெரிய பணிநீக்கத்தை செய்தார். ட்விட்டர் நிறுவனம் நாளொன்றுக்கு 4 மில்லியன் டாலருக்கு மேல் நஷ்டத்தை சந்திப்பதால் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என எலன் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து மேலும் லாபங்களை உருவாக்க, ட்விட்டரில் ப்ளூ டிக் (Blue tick) எனப்படும் வெரிஃபைடு குறி பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எலன் மஸ்க் தெரிவித்திருந்தது விவாதத்திற்குள்ளானது.
புதிய மாற்றங்கள்
ட்விட்டரில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்றும், ப்ளூ டிக் பெறுவதற்கு மாதத்திற்கு மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் எலன் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மாறுபடும் எனவும் தெரிவித்திருந்தார். ப்ளூ டிக் பெற கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டுமே எழுந்த நிலையில் பல விவாதங்களை கிளப்பியது. ட்விட்டரில் பலர் இதுகுறித்து பேசிக்கொண்டிருக்க, ஒருவர் எலன் மஸ்கிடமே கேட்டுவிட்டார். இந்தியாவுக்கு எப்போது ப்ளூ டிக் கட்டண முறை அமலுக்கு வரும் என்ற கேள்விக்கு எலன் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் எப்போது?
பிரபு என்ற பயனர் எலன் மஸ்க்கை டேக் செய்து, “இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்?” என்று கேட்டதற்கு, “ஒரு மாதத்திற்கும் குறைவான நாளுக்குள்ளாகவே வரும் என்று நம்புகிறேன்” என்று மஸ்க் பதிலளித்தார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆப்பிள் ஸ்டோரில் ட்விட்டர் ஏற்கனவே அப்டேட் ஆகி 8 டாலர் வசூலிக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சமூக ஊடக நிறுவனத்தை மஸ்க் கையகப்படுத்திய ஒரே வாரத்திற்குள் இந்த மாற்றம் வந்துள்ளது.
நீண்ட ட்வீட் போடலாம்
"தற்போது ஒருசில நாடுகளில் அமல்படுத்தபட்டுள்ளது, அது சிறப்பாகச் செயல்படுவதை நாங்கள் உறுதிசெய்த பிறகு, மொழிபெயர்ப்புப் பணிகள் முடிந்தவுடன், அது உலகம் முழுவதும் வெளிவரும்" என்று மஸ்க் சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். YouTube படைப்பாளர்களுக்கு விளம்பர வருவாயில் 55% தருவதாக ஒரு பயனர் சுட்டிக்காட்டியபோது, "நாங்கள் அதையும் விட அதிகமாக தருவோம்," என்று அவர் மற்றொரு ட்வீட்டில் பதிலளித்தார். "ட்விட்டர் விரைவில் ட்வீட்களில் நீண்ட வடிவ உரையை இணைக்கும் திறனைச் சேர்க்கும், பெரிதாக எழுத நோட்பேடில் எழுதி ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிடும் அபத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று மஸ்க் இன்னொரு ட்வீட்டில் கூறினார்.