டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் பி பிரிவில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்கதேச அணியையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்..? எந்த அணி வெளியேறும் என்று தெரியும்.


இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


 டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் நெதர்லாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் அடிப்படையில் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக மைபர்க் மற்றும் மேக்ஸ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நெதர்லாந்து அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். 


முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் எடுத்து பிரிந்தது. மைபர்க் 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேற, மேக்ஸ் தன் பங்கிற்கு 29 ரன்களுடன் நடையைக்கட்டினார். 


அடுத்து களமிறங்கிய டாம் கூப்பர் 35 ரன்களும், அக்கர்மேன் 41 ரன்களும் அடித்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.  


159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே தடுமாற தொடங்கியது. தொடக்க வீரர்களான டி காக் 13 ரன்களும், கேப்டன் பவுமா 20 ரன்களும் எடுத்து அவுட் ஆக, பின் வரிசை வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர். 






தொடர்ந்து சிறப்பான பந்து வீசிய நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்கா அணியை திணற செய்தனர். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 6 பந்துகளில் 26 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவர் வீசிய பாஸ் டி லீடே சிறப்பாக பந்துவீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து மகாராஜ் விக்கெட்டை கைப்பற்றினார், இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாகவே ரீலி ரோசோவ் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நெதர்லாந்து அணியை பொறுத்தவரை பிராண்டன் குளோவர் 3 விக்கெட்களும், பிரெட் கிளாசென் மற்றும் பாஸ் டி லீடே தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். நெதர்லாந்து அணிக்காக 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்த அக்கர்மேன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 






நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.