ட்விட்டர் தளத்தில் பதிவேற்றப்படும் படங்களை இனி தானாக `க்ராப்’ செய்யப் போவதில்லை எனவும், `க்ராப்’ செய்யப்படாமல், படங்களை முழுவதுமாகப் பார்க்க முடியும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மொபைல் வழியாக ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருந்தது. இனி, இணையதளம் மூலமாக ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு இனி `க்ராப்’ செய்யப்படாத படங்களைப் பார்க்க முடியும். தானாகவே `க்ராப்’ செய்யப்பட்டு உங்கள் படங்கள் எப்படி டைம்லைனில் காட்டப்படும் என பயப்படாமல், நீங்கள் படம் எடுத்தது போலவே பிறருக்கும் `க்ராப்’ செய்யாமல் காட்டப்படும்.



இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ட்விட்டர் டைம்லைனில் பதிவேற்றப்படும் படங்களை தானாகவே ட்விட்டர் `க்ராப்’ செய்து, டைம்லைனுக்கு ஏற்றவாறு காட்டிக் கொண்டிருந்தது. முழுப் படத்தையும் பார்வையிட வேண்டும் எனில், பயனாளர்கள் `க்ராப்’ செய்யப்பட்ட படத்திற்குள் சென்று அதனை முழுமையாகப் பார்க்கும் தேவையும் அப்போது இருந்தது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இந்த மாற்றங்களைக் கடந்த மார்ச் மாதம் சில ஆண்ட்ராய்ட், ஐஃபோன் பயனாளர்களை வைத்துப் பரிசோதனை செய்தது.


 



பழைய ட்விட்டர் டைம்லைன்




இனி புதிதாக ட்வீட்களைப் பதிவிடும் போது, நீங்கள் பதிவேற்றும் படம் பிறரின் டைம்லைனில் எப்படி இடம்பெறும் என்பதையும் பார்க்க முடியும். ட்விட்டர் தானாகவே `க்ராப்’ செய்துகொண்டிருந்த போது, அது வெள்ளையினத்தவரின் முகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும், புகைப்பட நிபுணர்கள், ஓவியக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் படங்கள் முழுமையாகக் காட்டப்பட வேண்டும் எனவும் எதிர்பார்ப்பதாலும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.





ட்விட்டரில் புதிதாக பதிவேற்றப்படும் படங்களால் பயனாளர்களின் டைம்லைன்களின் இனி அதிக இடம் பயன்படுத்தப்படும் என்ற போது, தானாக படங்களுக்குள் சென்று அதனைப் பார்வையிடும் தொல்லை இனி இல்லை எனப் பயனாளர்கள் பலரும் கூறி வருகின்றனர்.


 



புதிய ட்விட்டர் டைம்லைன்




இந்தப் புதிய மாற்றங்களைச் செய்து வருவதன் மூலம், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதைக் காட்டிக் கொள்ள முயன்று வருகிறது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் தங்கள் ஸ்பேசஸ் வசதியை ட்விட்டர் தளத்தில் லாக் இன் செய்யாத பிறருக்கும் கேட்கும் வகையில் மாற்றம் செய்து தந்தது. மேலும், ப்ரீமியம் செயலியாக, `ட்விட்டர் ப்ளூ’ என்ற செயலியும், அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.