தனது நடிப்பில் கமல் கூட்டணியில் வெளியான அவ்வை சண்முகி படம் வெளியான அவ்வை சண்முகி படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாராப்பொண்ணு
இந்தப் பாடல் நினைவில் உள்ளதா? கோலிவுட்டில் மட்டும் தான் ஹீரோயினைப் பிடித்துவிட்டால் அவருக்காகவே பாடல்களை எழுதி மாஸ் செய்யும் வழக்கம் உள்ளது.
நதியா நதியா நதி நதியா பாடல் தொடங்கி, கொண்டையில் தாழம்பூ குஷ்பூ குஷ்பூ பாடல் வரிசையில் மீனா பொண்ணு மீனா பொண்ணு என்று நடிகை மீனாவும் கொண்டாடப்பட்டார். அந்த விழிகள் ஆயிரம் கதை பேசும் என்பதாலேயே அவருக்கு ஆயிரமாயிரம் ரசிகர்கள் குவிந்தனர். கடல் தாண்டியும் ரசிகர் பட்டாளம் உண்டு. ஜப்பானில் நடிகை மீனாவுக்காகவே முத்து படம் மெகா ஹிட் ஆனது எல்லாம் வேறு கதை. ஜப்பானுக்கு மீனா சென்றபோது மீனாசான், மீனாசான் (சான் என்றால் ஜப்பானிய மொழியில் மரியாதைக்கான அடைமொழி) என்று ரசிகர்கள் அரங்கில் கரகோஷத்துடன் கூச்சிலிட்டதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
திரையுலகும் ரசிகர்களும் கொண்டாடிய மீனா இப்போது அவ்வை சண்முகி திரைப்படத்தைக் கொண்டாடியுள்ளார்.
ஆம், தனது நடிப்பில் கமல் கூட்டணியில் வெளியான அவ்வை சண்முகி படம் வெளியான அவ்வை சண்முகி படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ‘அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இந்த தலைசிறந்த படைப்பை நாங்கள் படமாக்கிய அற்புதமான நேரத்தை நினைவு கூர்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அவ்வை சண்முகி (Avvai Shanmughi) 1996 ஆம் ஆண்டு நவம்பர் 10ல் வெளிவந்த திரைப்படம். அந்தக் காலக்கட்டத்தின் மாஸ் இயக்குநரான கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், மணிவண்ணன், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
படம் முழுவதும் காமெடி, எமோஷன் எனக் கலவையாக ரசிகர்களைக் குஷிப்படுத்தி பாக்ஸ் ஆஃபீசில் கல்லா கட்டியது. அந்தப் படத்தில் ஹீரா கிறங்கடிக்கும் அழகிலும், மீனா கொஞ்சும் மொழி கிள்ளையாகவும் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார்கள்.
பேசு பொருளான மேக் அப்:
அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டவர் மைக்கல் வெஸ்ட்மோர். இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அ பிரபலமான நடிகர்கள் பலருக்கும் இவர் மேக்கப் செய்து உள்ளார். தனது மேக்கப் திறமைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் கமலுக்கு இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட 4 மணி நேரம் மேக்கப் போடுவாராம். ஆனால் அந்த மேக்கப் 5 மணி நேரம் மட்டுமே நிற்கும், அதன் பிறகு சுருக்கம் விழும், மேக்கப்பில் விரிசலும் விழும் அதனால் 5 மணி நேரத்துக்குள் அன்றைய காட்சிகளை எடுத்து முடிப்பார்களாம். இப்படியாக மிகுந்த மெனக்கிடலுக்கு இடையே உருவாக்கப்பட்டது தான் அவ்வை சண்முகி.
சண்முகியை மீனா மட்டுமல்ல நாமும் கொண்டாடுவோம்.