ஸ்பேம் கால் பிரச்னைகளை தவிர்க்கும் நோக்கில், வாட்ஸ்-அப் செயலியிலும் விரைவில் தங்கள் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ட்ரூ-காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் செயலியில் ட்ரூ காலர் பயன்பாடு:
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூ காலர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி , வாட்ஸ் - அப் உள்ளிட்ட குறுந்தகவல் அனுப்பும் செயலியிலும் தங்களது சேவை விரைவில் தொடங்க உள்ளது. புதிய வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், மே மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவித்தார்.
ட்ரூ-காலர் பயன்பாடு:
உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக செல்போன்கள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தாலும், தற்போது அது முழுமையாக வணிக நோக்கமாக மாறியுள்ளது. வீட்டிற்கான தேவையான சிறு பொருட்கள் முதற்கொண்டு வீட்டையே வாங்கும் வரையிலான பல விளம்பரங்கள் மற்றும் அதற்கான முகவர்கள் செல்போன்கள் மூலம் தான் அதன் பயனாளர்களை அணுகுகின்றனர். அதில் ஒரு சில அழைப்புகள் பயனுள்ளதாக இருந்தாலும், பெரும்பாலானவை அநாவசியமானதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளன. அழைப்பை மேற்கொள்வது யார் என்று தெரியாத சூழலில், புதிய எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான் ட்ரூ-காலர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் அது யார் என்பது தொடர்பான விவரங்களை ட்ரூ - காலர் செயலி மூலம் அறியலாம்.
35 கோடி பயனாளர்கள்:
ட்ரூ காலர் நிறுவனம் உலகம் முழுவதும் 35 கோடி பயனாளர்களை கொண்டிருந்தாலும், அதில் 25 கோடி பேர் இந்தியர்கள் தான். உலகம் முழுவதும் விளம்பரங்கள், சந்தாதாரர்கள் மூலம் இந்த நிறுவனம் வருவாய் ஈர்த்து வருகிறது. அதோடு அநாவசிய அழைப்புகளை தவிர்ப்பதற்கு உதவுவதால், இந்தியர்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், சாதாரண அழைப்புகளை தாண்டி தற்போது இணைய வசதியால் செயல்படும், வாட்ஸ்-அப் செயலியிலும் ஸ்பேம் கால்கள் அதிகரித்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் டெலிமார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் கால் என, மாதத்திற்கு சராசரியாக 17 அநாவசிய அழைப்புகளை பயனாளர்கள் பெற்று வருவதாக, ட்ரூ காலர் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்னறிவு திறன்:
இந்தியாவின் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம், செயற்கை நுண்ணறிவு பில்டர்க்ளை பயன்படுத்தி தங்கள் நெட்வொர்க்குகளில் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கத் தொடங்க வேண்டும் என ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வலியுறுத்தியது. அத்தகைய தீர்வைச் செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடி வருவதாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெலிமார்க்கெட்டிங் முகவர்கள் இணைய அழைப்பிற்கு மாறுவது சந்தைக்கு மிகவும் புதியது எனவும், கடந்த இரண்டு வாரங்களாக, வாட்ஸ்-அப் செயலில் மூலமான ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் ட்ரூ காலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தான், வாட்ஸ்-அப் செயலியில் அழைப்பு மேற்கொள்பவரை அடையாளம் காண்பதற்கான, தங்கள் சேவை விரைவில் தொடங்கும் என ட்ரூ-காலர் நிறுவனம் அறிவித்துள்ளது.