ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்களுடன் இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை கடந்தார். இவரது பேட்டில் இருந்து 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் பறந்தது. 


இந்த இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல்லில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். டேவிட் வார்னரும், விராட் கோலியும் அவருக்கு முன் இதைச் செய்திருந்தனர். வார்னர் அதிகபட்சமாக 59 அரை சதங்களுடனும் முதலிடத்திலும், விராட் கோலி 50 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் தனது 214வது போட்டியில் 213வது இன்னிங்சில் இந்த பெரிய சாதனையை படைத்தார். மேலும் இந்த லீக் வரலாற்றில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். தவான் 6593 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி  7043 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


ஐபிஎல்லில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்:



  • டேவிட் வார்னர் - 59

  • விராட் கோலி - 50

  • ஷிகர் தவான் - 50

  • ரோஹித் சர்மா - 41

  • ஏபி டி வில்லியர்ஸ் - 40


ஐபிஎல் 16வது சீசனில் இதுவரை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. 8 இன்னிங்ஸில் களமிறங்கி 3 அரைசதம் உள்பட 349 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் அவரது சிறந்த ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தது. கடந்த சில சீசன்களில் தொடர்ந்து 400-500 ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் இவர்தான். ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானின் ஆட்டம் எப்போதும் சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.


போட்டி சுருக்கம்: 


பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவானின் 57 ரன்களால் 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை எட்டியது.


தோல்விக்கு பிறகு பேசிய ஷிகர் தவான், “கடைசி ஓவரில் அர்ஷ்தீப் அற்புதமாக பந்து வீசினார். இந்தப் போட்டியை கடைசி பந்து வரை எடுத்துச் சென்ற பெருமை அர்ஷ்தீப்பைச் சேரும். எங்களிடம் நல்ல ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு முன்னால் பந்துவீசுவதில் நாங்கள் கொஞ்சம் பலவீனமாகத் தெரிகிறோம். இந்த விக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்று தெரிவித்தார். 


கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால், புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. தற்போது பஞ்சாப் அணிக்கு எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவது பிளேஆஃப் சுற்றுக்கு மிகவும் முக்கியமானது. பஞ்சாப் அணி தனது அடுத்த 2 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.