இந்தியாவின் 4ஜி நெட்வொர்க் வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுள் அதிக சராசரி டேட்டா வேகத்தை வழங்குவதில் முதலிடம் பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். கடந்த நவம்பர் மாதம், ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு சுமார் 24.1 மெகாபிட் டவுன்லோட் வேகத்தை சராசரியாகக் கொண்டிருந்ததாக ட்ராய் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது. 


இந்தப் பட்டியலில் வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பாரதி ஏர்டெல் நிறுவனமும் கடந்த நவம்பர் மாதத்தில் சராசரி 4ஜி டவுன்லோட் வேகத்தை அதிகரித்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கடந்த அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகத்தில் சுமார் 10 சதவிகிதம் வரை உயர்வு இருந்ததாகவும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் டவுன்லோட் வேகம் சுமார் 8.9 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும்,. ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் சுமார் 5.3 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும் ட்ராய் அமைப்பு பதிவு செய்துள்ளது. 



அப்லோட் வேகத்தைப் பொருத்த வரையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. நொடிக்கு சுமார் 8 mb அப்லோட் வேகம் கொண்ட வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த ஐந்து மாதங்களாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 


இணையத்தைப் பார்வையிடுவது, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிறக்குவது ஆகியவற்றிற்கு டவுன்லோட் வேகம் பயன்படுகிறது. படங்கள், வீடியோக்கள் முதலான டேட்டாவைப் பகிர்வதற்குப் பயன்படும் இணைய வேகம் அப்லோட் வேகம் என அழைக்கப்படுகிறது. 


ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களும் கடந்த நவம்பர் மாதத்தில் கடந்த ஐந்து மாதங்களை விட அதிக அப்லோட் வேகத்தைப் பதிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி அப்லோட் வேகம் சுமார் 5.6 mbps எனவும், ஜியோ நெட்வொர்க்கின் அப்லோட் வேகம் சுமார் 7.1 mbps எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 



ட்ராய் நிறுவனம் MySpeed என்ற செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தி, இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் டேட்டாவின் வேகத்தைச் சேகரித்து, அதன்மூலம் சராசரி இணைய வேகத்தைக் கணக்கிடுகிறது. 


இணைய வேகம் மட்டுமின்றி, அதிக புகார் செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலையும் ட்ராய் அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய தொலை தொடர்புத்துறையின் இணை அமைச்சர் தேவுசின் சௌகான் கடந்த 2021ஆம் ஆண்டு பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மீது சுமார் 16 ஆயிரம் புகார்களையும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மீது சுமார் 14 ஆயிரம் புகார்களையும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது சுமார் 7 ஆயிரம் புகார்களையும் ட்ராய் அமைப்பு பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.  எனினும் ட்ராய் அமைப்பு பெற்றுள்ள புகார்களை சம்பந்தபட்ட அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக இணை அமைச்சர் தேவுசின் சௌகான் தெரிவித்துள்ளார்.