தருமபுரி மாவட்டம் வத்தல்மலை பெரியூர் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வடி, சத்துணவு மையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு முறைக்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தி, கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வத்தல்மலை அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில் படிக்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கினர்.  இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 



 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணைய உறுப்பினர் ராமராஜ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு விரைவில் உரிய பயிற்சி வழங்கப்படும். அதே போல் கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாநகர மண்டல அளவிலான, நகர மற்றும் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் உரிய பயிற்சி அளித்து அவை வலுப்படுத்தப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு செயலாளர்களுக்கு விரைவில்  பயிற்சி வழங்கப்படும். தமிழக அரசு கடந்த மாதம்  பிரகடனம் செய்துள்ள அரசின் குழந்தை பாதுகாப்பு கொள்கை, குழந்தைகள் உரிமைகளின் சரித்திரத்தில் முக்கிய மைல்கல் ஆகும். இக்கொள்கையின்படி கிராம குழந்தைகள் சபை கூட்டங்கள் நடத்தப்படும். இதைப் போலவே நகர குழந்தைகள் சபை, மாநகர குழந்தைகள் சபை போன்றவற்றையும் நடத்தலாம்.

 



 

இத்தகைய குழந்தைகள் சபைகள் குழந்தைகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் தளமாக அமைவதோடும், பிரச்சனைகளுக்கான தீர்வையும் தரும் மன்றமாக விளங்கும். கொரோனா காலத்தை தொடர்ந்து  தமிழகத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கணக்கெடுப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளி இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டம் வத்தல்மலை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 10  மாணவர்கள் பள்ளிக்கு வராமல் நின்றுள்ளனர். இந்த மாணவர்களை சந்தித்து பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். இந்த 10 மாணவர்களைப் அடுத்த வாரம் பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனர் என  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுபினர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.