ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் நடந்து கொள்வது பிளவுக்கான ஊகங்களை உறுதிபடுத்துகிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். 


ரோஹித் சர்மா காயம் அடைந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவது இரண்டு முன்னணி வீரர்களுக்கு இடையேயான பிளவு குறித்த ஊகங்களை நிரூபிக்கிறது என அசாருதீன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரோஹித் ஷர்மா வரவிருக்கும் டெஸ்டில் விளையாட முடியாது என்றும் விராட் கோலி  ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இது பிளவுக்கான ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. கிரிக்கெட்டின் மற்றொரு வடிவத்தை இருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 






இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


2021ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவின் இருபது ஓவர் அணிக்குக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.  சில நாட்களுக்கு முன்பு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர், பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 




இதனால் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவாரா, ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் கேப்டன் பொறுப்பை யார் வகிப்பார் என கேள்விகள் எழுந்தன. இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் குணமாகிவிடும் என்றும், எனவே அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஒருநாள் போட்டியில் கோலியும் டெஸ்ட் போட்டியில் ரோகித்தும் விளையாடாமல் விலகி செல்வது இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும், அவர்களுக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






இதனிடையே பிசிசிஐக்கு ரோகித் சர்மா அளித்த பேட்டியில், “5 ஆண்டுகள் விராட் கோலி அணியை வழிநடத்திய அந்த நாட்கள் சிறந்த தருணங்கள். ஒவ்வொருமுறையும் களத்துக்குள் களமிறங்கும் போதும், சரியான தீர்மானத்துடன், தீர்க்கமான முடிவுடன், வெற்றி பெற வேண்டும் என்ற திடமான மனதுடன் களமிறங்க வைப்பார். வீரர்களுக்கு தெளிவான, சரியான தகவல் கோலியிடம் இருந்து வரும்.


கோலியின் தலைமையில் கீழ் விளையாடிய போட்டிகள் மிகப்பெரிய தருணங்கள். அவருக்கு கீழ் பல போட்டிகளை விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியையும, தருணத்தையும் ரசித்து, அனுபவித்து விளையாடியிருக்கிறேன். தொடர்ந்து அவரின் கீழ் விளையாடவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.