ஸ்மார்ட்போன் காலத்தில் எல்லாருமே போட்டோகிராபர்கள் தான். தற்போது மிகக்குறைந்த பட்ஜெட்களிலும் நல்ல கேமராவுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இன்று உலக புகைப்பட தினம் என்பதை முன்னிட்டு, நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிறந்த புகைப்பட செயலிகளைக் குறித்த கட்டுரை இது.
Snapseed
கூகுள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் Snapseed நேர்த்தியான எடிட்டிங் வசதிகளை உள்ளடக்கியது. இது ஆண்ட்ராய்டு போன்களிலும், ஐபோன்களிலும் கிடைக்கிறது. இந்த செயலியில் 29 பில்டர்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் JPG, RAW ஆகிய வகைப் புகைப்படங்களையும் இதில் பயன்படுத்தலாம். மேலும், பெர்சனால சில செட்டிங்ஸ்களை உருவாக்கி, எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்லலாம். இந்த செயலி வழங்கும் precision masking tool என்பதைப் பயன்படுத்தி, உங்கள் படங்களின் பின்னணிகளை blur ஆக மாற்றிக் கொள்ளவும் முடியும்.
Adobe Lightroom
அடோப் நிறுவனம் வழங்கும் இந்த செயலியைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்து, எடிட் செய்து, பிற செயலிகளுக்குப் பகிரவும் முடியும். சில ஸ்மார்ட்போன்களில் இருந்து Raw புகைப்படங்களை எடுப்பதற்கும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம். கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த செயலிக்குள் கொண்டு வந்து, அவற்றைத் தரம் பிரித்து, cloudக்கு அப்லோட் செய்துகொள்ளலாம். இதில் கிடைக்கும் presetகளைப் பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை அழகாக எடிட் செய்துகொள்ளலாம். Creative Cloud என்ற இதன் தளத்தில் லாக் இன் செய்துகொண்டால், அதன் மூலம் ஸ்மார்ட்போன், டேப், கம்ப்யூட்டர் முதலானற்றில் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு போன்களிலும், ஐபோன்களிலும் கிடைக்கிறது.
Camera MX
MagiX நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலி இது. இந்த செயலி ஆண்ட்ராய்ட் போன்களுக்கு மட்டும் கிடைக்கிறது. அற்புதமான இமேஜ் ப்ராசசிங் அம்சத்தைக் கொண்டுள்ள இந்த செயலியைப் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறப்பாக வெளிவருகின்றன. பல்வேறு எடிட்டிங் வசதிகளும் இதில் உள்ளன. Live Shot feature என்ற பெயரில், படம் எடுப்பதற்கு முந்தைய சில நொடிகளில் நீங்கள் தயாராவதைப் படம்பிடித்து, லைவ் புகைப்படமாக அதனைப் பகிரும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் கேமரா வழங்கும் அத்தனை வசதிகளையும் இந்த செயலி பயன்படுத்தி, சிறந்த புகைப்படங்களை உருவாக்குகிறது.
ProCam 8
இது iOS போன்களுக்கு மட்டும் கிடைக்கும் செயலி. இந்த செயலி மூலம், போன் கேமரா முழுவதுமாக நாம் பயன்படுத்தும் வசதி இருப்பதால், இதைப் பயன்படுத்தி எடுக்கும் படங்கள் dslr கேமராக்களின் தரத்திற்கு இருக்கின்றன. மேலும், இதைப் பயன்படுத்துவோருக்கு ஏற்றார்போல் advanced வசதிகளையும் அளிக்கின்றன. இந்த செயலி 7.99 அமெரிக்க டாலர் விலைக்குக் கிடைக்கிறது.
Prisma
நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை வித்தியாசமான பில்டர்களிலும், எஃபெக்ட்களிலும் மாற்றுவதற்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். இது ஆண்ட்ராய்டு போன்களிலும், ஐபோன்களிலும் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் 300 வகை பில்டர்களும் தனித்தன்மை வாய்ந்தவை. பில்டர்களைப் பயன்படுத்துவதோடு, படங்களை zoom செய்து, எடிட் செய்வதற்கும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.