கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்காரா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏ.சி. மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது, ஹரிஷ் பங்காரவை அந்த நாட்டு போலீசார் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு எதிராகவும், சவுதி அரேபிய அரசிற்கு எதிராகவும் அவதூறாக பதிவிட்டதாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி கைது செய்தனர்.


திடீரென்று கைது செய்யப்பட்டதால் ஹரிஷ் பங்காரா செய்வதறியாமல் திகைத்துள்ளார். மேலும், கர்நாடகாவில் இருந்த அவரது மனைவி உள்பட அவரது குடும்பத்தினரும் இந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சவுதி அரேபிய போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிஷ் பங்காரா தான் முகநூலில் எந்தவொரு அவதூறு பதிவும் பதிவிடவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.




இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் இருந்த அவரது குடும்பத்தினர் அம்மாநிலத்தில் உள்ள உடுப்பி காவல் நிலையத்தில் தனது கணவரை சவுதி அரேபியாவில் தவறுதலாக கைது செய்துள்ளதாகவும், தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் ஹரிஷ் பங்காரு முகநூலில் மெக்கா பற்றியும், சவுதி அரேபிய மன்னர் பற்றியும் அவதூறாக எந்தவொரு கருத்தையும் பதிவிடவில்லை என்பதை கண்டறிந்தனர்.


மேலும், ஹரிஷ் பங்காரா பெயரில் போலியாக கணக்கு தொடங்கி மெக்கா பற்றியும், சவுதி அரேபிய மன்னர் பற்றியும் அவதூறாக கருத்து பதிவிட்ட அப்துல் ஹயூஸ் மற்றும் அப்துல் துயூஸ் ஆகிய இருவரையும் உடுப்பி போலீசார் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.


உடுப்பி போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்ததன் மூலம், சவுதியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஷ் பங்காருவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு பின்னர், சுமார் ஓராண்டுக்கு பிறகு ஹரிஷ் பங்காரா குற்றவாளி இல்லையென்று நிரூபிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா வைரஸ் காரணமாக அவரது விடுதலையில் சிக்கல் ஏற்பட்டது.




அவர் குற்றவாளி இல்லையென்பதற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும், அந்த நாட்டு நீதிமன்றம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த காரணத்தால் அவரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் அந்த நாட்டு நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.  


விடுதலை செய்யப்பட்ட அவர் சுமார் 600 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, சவுதி அரேபியாவில் இருந்து நேற்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கர்நாடகம் திரும்பிய அவரை அவரது மனைவி ஆனந்த கண்ணீருடன் கட்டித்தழுவி வரவேற்றார். ஹரிஷ் பங்காராவிற்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


பெங்களூர் திரும்பிய ஹரிஷ் பங்காரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”அவர்கள் என்னை விசாரணை சிறையில் அடைத்திருந்தனர். என்னை வெளியில் கொண்டு வந்தவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ஹரிஷ் பங்காரா நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டதும், அவர் பணிபுரிந்த நிறுவனம் அவருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அவர் தனது குடும்பத்தினரை காணவே விரும்புவதாக கூறி இந்தியா திரும்பிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் சிக்கிக்கொண்ட இந்தியாவைச் சேர்ந்த நிரபராதியை மீட்பதற்கு, சமயோசிதமாக செயல்பட்ட உடுப்பி போலீசாரை அந்த மாநில காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.