இந்தியாவில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்:


சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் குழுமத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி நிறுவனத்திற்காக, இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கூறிய பிறகு 40 ஊழியர்களையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அதோடு அவர்களுக்கு 9 மாதங்களுக்கான ஊதியமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது. 


காரணம் என்ன? 


சீன செயலிகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியின் பயன்பாட்டை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை என கூறி, இந்த பணிநீக்க நடவடிக்கையை எடுப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றி வரும் 40 ஊழியர்களுக்கும், பிப்ரவரி 28ம் தேதி தான் கடைசி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ததன் மூலம், இந்தியாவில் தனது செயல்பாட்டை முற்றிலும் நிறுத்த டிக்டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பாக டிக் டாக் நிறுவனம் இந்தியாவில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


டிக் டாக் செயலிக்கு தடை:


தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்தியாவில் இரண்டாவது பெரிய பயனர் தளத்தைக் கொண்டிருந்த TikTok செயலி கடந்த 2020ம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் செயல்பாடு நிறுத்தப்பட்ட போதிலும், அந்நிறுவனம் இன்னும் இங்கு அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இந்திய அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலான TikTok ஊழியர்கள் பிரேசில் மற்றும் துபாயை சேர்ந்த பயனாளர்களுக்கான சேவையை வழங்கி வந்தனர்.  இதனிடையே, பைட் டான்ஸ் நிறுவனம் தங்கள் தரப்பை நியாயப்படுத்த முயன்றாலும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இதனால் இந்தியாவில்  டிக்டாக் செயலியை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் சூழல் தற்போதைக்கு இல்லை. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.


பெரும் வரவேற்பு பெற்ற டிக்டாக் செயலி:


கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் டிக்டாக் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர் தங்களது நடனம் மற்றும் பாடல் போன்ற தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், 15 விநாடிகளுக்கு வீடியோ வெளியிடும் அம்சத்துடன் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்ட்ராய்ட் செயலி பதிவிறக்கங்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி 2017ம் ஆண்டு முதலிடம் பிடித்தது. இந்த செயலிக்கு அதிக பயனாளர்களை கொண்ட நாடாக சீனாவை தொடர்ந்து இந்தியா மாறியது.


தடை ஏன்:


இதனிடையே, செயலியை பதிவிறக்கம் செய்ததும் உள்ளீடு செய்யும் தகவல்களை சேமித்து வைக்கும் டிக்டாக் நிறுவனம், அவற்றை சட்டவிரோதமாக சீன அரசுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைதொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக, கடந்த 2020ம் ஆண்டு டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.