1000 பேர் பணிநீக்கம்


உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் செலவுகளை குறைக்கும் நோக்கில், பணிநீக்கம் நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களின் வரிசையில் இணைந்தது யாஹு நிறுவனம். அந்த வகையில் அந்த நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 12 சதவிகிதம் அல்லது ஆயிரம் பேரை இந்த வார தொடக்கத்தில் இருந்து பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பர தொழில்நுட்பப் பிரிவை மறுகட்டமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


50% பணியாளர்களை நீக்க திட்டம்


அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இன்க்.க்கு சொந்தமான இந்த நிறுவனம், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் Yahoo for Business விளம்பர தொழில்நுட்ப பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 50% அல்லது யாஹூவில் உள்ள பணியாளர்களில் 20% க்கும் அதிகமாக குறைக்க திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


அடுத்த கட்டம் என்ன?


”அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள் முற்றிலும் அந்த பிரிவுக்கு சிறந்த வணிகத் திட்டத்தை உருவாக்கும் சூழல் உள்ளது. ஒரு தனி நிறுவனமாக நாங்கள் எங்களது வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் நேர்மையாக நாங்கள் கவனிக்க வேண்டியுள்ள்ளது” என, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம் லான்சோன் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம், யாஹு நிறுவனத்தில் தனி விளம்பரப்பிரிவு ஏற்படுத்தப்படும். அதன் மூலம், Yahoo Finance, Yahoo News மற்றும் Yahoo Sports உள்ளிட்ட பிரிவுகளில் விளம்பர விற்பனையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


7000 பேரை வெளியேற்றிய டிஸ்னி


முன்னதாக நேற்று, பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. கடந்த ஆண்டு டிஸ்னி சி.இ.ஓ வாக பாப் இகர் பதவியேற்றபின், எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவு இதுவாகும்.


உலகெங்கும் பணிநீக்கம்:


உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அண்மையில் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும்.  அதை தொடர்ந்து, அமேசான் நிறுவனமும், சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. 


தொடர்ந்து,  உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதால் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.  அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களையும், ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ், ஷாப்பி மற்றும் ஜூம் ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டன.