உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலாக உள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே நடமாடும் பலரும் கொரோனாவை எளிமையாக பரப்பி விடுவதாக தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அனைவருக்குமான கொரோனா பரிசோதனையே  கொரோனாவில் இருந்து அனைவரும் மீள்வதற்கான வாய்ப்பாக கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் தற்போது எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட  அதிகபட்சமாக மூன்று நாட்கள் ஆகிறது.  இதனால் தீவிர தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நபர் , சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் , உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. தற்பொழுது மூக்கு மற்றும் வாய் வழியாக எடுக்கப்படும் மாதிரிகளை கொண்டே கொரோனா பரிசோதனை உலகம் முழுவதும்  மேற்க்கொள்ளப்படுகிறது. இதனை பிசிஆர் சோதனை என அழைக்கின்றனர்.  இந்த நிலையில், மாஸ்க் மூலமாக கொரோனா பரிசோதனை செய்யலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 



 


மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( Massachusetts Institute of Technology ) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் (Wyss Institute for Biologically Inspired Engineering at Harvard University) இணைந்து,பயோ சென்சார் மூலம் செயல்படக்கூடிய  கேஎன்95 மாஸ்குகளை கண்டறிந்துள்ளனர். ஒரு நபர் வெளியிடும் சுவாசத்தை வைத்தே அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என்பதே ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு.இந்த கொரோனா பரிசோதனையை மருத்துவர்கள் குழு உதவியின்றி பயனாளர்களே கண்டறிய முடியுமாம். இதற்காக மாஸ்கின் ஒரு புறத்தில்  பொத்தான் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அழுத்துவதன் மூலம் மாஸ்கின் சென்சார் தூண்டப்பட்டு , மாஸ்கில் சேமித்து வைக்கப்படும் சுவாச நஞ்சுகளை சோதனை செய்து, 90 நிமிடங்களில் மாஸ்க் அணிந்த நபருக்கு கொரோனா பரிசொதனையை கொடுத்து விடுமாம். மொபைல் மூலம் இணைப்பதற்கு வழி வகை செய்யப்படிருப்பதால் முடிவுகளை மொபைல் வாயிலாகவே பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.  மேலும் எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் மனிதர்களை தாக்கினால் அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும், அந்த வகை தொற்று குறித்த பரிசோதனைக்கும்  இது உதவியாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.




இது பிசிஆர் சோதனைகளை  போலவே துல்லியமான முடிவுகளை கொடுப்பதாக தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அசத்தலாக அறிமுகமாகியுள்ள இந்த வகை கேஎன்95  மாஸ்கானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை முயற்சியில் உள்ள பயோசென்சார் மாஸ்க் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என  தகவல் வெளியாகியுள்ளது. இது தவிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற  நுண்ணுயிரிகளை கண்டறியும் வகையில் முயற்சிகளிலும் இந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை போலவே பல நிறுவனங்கள் எவ்வாறு  துல்லியமான கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் பெறலாம்   என்பதை அடிப்படையாக கொண்டு  ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.