தீபாவளி அன்று மறுநாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்கிற சோகத்துடன் அலுவலகம் பயணித்தவர்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக வாட்சப் செயலிழப்பு அமைந்தது. எப்போதும் போனை பார்த்துக்கொண்டே நாளைக் கடத்திவிடும் நபர்களுக்கு அந்த இரண்டு மணிநேரம் பெரும் போராட்டமாக இருந்தது எனலாம்.  அக்டோபர் 25 அன்று உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான பயனர்களுக்கு வாட்ஸ்அப் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இயங்காமல் செயலிழந்து கிடந்தது. சேவைகள் மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு மொபைல் ஃபோன் மற்றும் வாட்ஸ்அப் வெப் என இரண்டிலும்  தனிப்பட்ட மற்றும் வணிக பயனர்களை இந்த செயலிழப்பு பாதித்தது.


சேவைகள் மீட்டெடுக்கப்பட்டதை உறுதிசெய்து, மெட்டா தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வாட்ஸ்அப்பில் மக்கள் இன்று செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் சிக்கலைச் சரிசெய்துவிட்டோம், ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியிருந்தது.


வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாக இந்தக் குறுகியகால செயலிழப்பு ஏற்பட்டது" என்று வெளிப்படுத்தினார், மேலும் இந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது,என்றும் அவர் தெரிவித்தார்.


வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, ‘தொழில்நுட்பப் பிழை’ எதனால் ஏற்பட்டது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் கோடிக்கணக்கான  பயனர்களுக்கு வாட்சப் செயலிழந்தது. அப்போது, டிஎன்எஸ் (டொமைன் நேம் சிஸ்டம்) தொடர்பான பிரச்னையால் அதன் சேவைகள் முடங்கியதாக நிறுவனம் கூறியது. தற்போதைய செயலிழப்பும் இதேபோன்ற சிக்கலின் விளைவாக இருக்கலாம், ஆனால் நிறுவனத்திடமிருந்து கூடுதல் விவரங்கள் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை.




முன்னதாக, வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதை அடுத்து இந்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் செயல்படும் மெட்டா நிறுவனத்திடம்  விரிவான அறிக்கை கேட்டுள்ளது.  மெட்டாவின் வாட்ஸ் அப் தளத்தில் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரலாம். அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப்பின் சேவைகள் 2 மணிநேரம் தடைபட்டன. வாட்ஸ்ஆப் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் வெப் சேவை முடங்கியதாக  மெட்டா ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டது.


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ, போட்டோ, ஆடியோ  மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குழுக்களாக ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.


இந்த சேவைகள் முடங்கியதையடுத்து, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் ஆப் செய்தி தளத்தின் நீண்ட இடையூறு பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையை வெளியிடுமாறு மெட்டா இந்தியாவிடம் (meta india) கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது போன்ற நீண்ட  சேவை முடகங்களுக்கு பின் ஏதேனும் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ள்தா என தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும்  கண்காணித்து வருகிறது.


உலகளாவிய வாட்ஸ் ஆப் செயலிழப்பிற்கு பின்னால் சைபர் தாக்குதல் ஏதேனும் இருந்தால், Meta அறிக்கையை CERT-In அல்லது இந்தியாவின் சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் என்ற அமைப்புக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருகிறது