பாரபட்சமில்லாத ஹீரோத்தனம்தான் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு காரணம் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பேசி இருக்கிறார். 


இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலி, ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்படமானது, சர்வதேச அளவில் வசூல் ரீதியாக பயங்கர ஹிட் ஆனாலும், இதன் ப்ரோமோஷன் தொடர்பான வேலைகள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. 


இந்தப்படம், இந்திய ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் மொழி, கலாச்சாரம் என பல தடைகளை தாண்டி உலகில் உள்ள பல மக்களின் கவனத்தை ஆர்.ஆர்.ஆர் ஈர்த்தது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குநரான ராஜமெளலி, பாரபட்சமில்லாத ஹீரோத்தனம்தான் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று பேசி இருக்கிறார். 


 






சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ராஜமெளலி,  “இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பல மக்கள் உலகெங்கிலும் உள்ளனர். இந்திய மக்கள் இருக்கும் இடத்தில் இப்படம் வெற்றி அடையும் என்று எனக்கு தெரியும். ஆனால் வெளிநாட்டவர்களிடம் இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு  என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆர் ஆர் ஆர் படத்தில் பாரபட்சமின்றி வைக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளும், பாரபட்சமில்லாத ஹீரோத்தனமும்தான் இந்த படத்தின் வெற்றிக்கு  காரணம் என்று நான் கருதுகிறேன். இது தான் இப்படத்தின் அசூரத்தனமான வெற்றிக்கு காரணம் என்பதை நான் உறுதியாக சொல்வேன்.” என்று அவர் பேசினார். 






ஒருபக்கம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், போட்டி போட்டுக்கொண்டு பல விருதுகளை குவித்து வருகிறது. தற்போது, 50 வது சாட்டர்ன் விருதுகளில் ’ஆர் ஆர் ஆர்' சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது. உலகம் எங்கிலும் வெளியான இப்படம், ஜப்பானில் கடந்த வாரம் வெளியானது. அங்கும் வசூல் ரீதியாக ஆர்.ஆர்.ஆர் சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. 


மேலும் படிக்க : RRR Wins Saturn Award :50வது சாட்டர்ன் விருது: சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றது 'RRR'