இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் மொத்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகள் ஆகியவற்றை சேர்த்து சுமார் 5.28 லட்சம் பேர் பணி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஐடி ஊழியர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தடுப்பூசி செலுத்தியவர்களை வைத்து மீண்டும் அலுவலகங்களை திறக்க சில நிறுவனங்கள் திட்டுமிட்டு வருகின்றன.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் பணியமர்த்த திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மிலிந்த் லக்காட் எழுதிய கடிதத்தில், "இந்த ஆண்டு இறுதிக்குள் நம்முடைய நிறுவனங்களில் மீண்டும் ஊழியர்கள் வந்து பணியமர்த்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய புதிய திட்டமான 25/25 திட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக ஊழியர்கள் அலுவலகத்தில் மீண்டும் பணி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படமாட்டாது. அந்தந்த பகுதிகளில் உள்ள குழுக்களின் தலைவர்கள் முடிவிற்கு ஏற்ப இது செயல்படுத்தப்படும். மேலும் ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி பணி செய்ய தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அலுவலகத்தில் இதற்கான நெறிமுறை வகுப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் 25/25 என்ற புதிய வேலை திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி வரும் 2025ஆம் ஆண்டிற்குள் அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும். எஞ்சிய ஊழியர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்தே நிரந்தரமாக பணி செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டு முதல் முழுவதுமாக செயல்பாட்டிற்கு வரும் என்று டிசிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: Google playstore | உஷார்..! இந்த 3 போட்டோ எடிட்டிங் ஆப் ரொம்ப ரிஸ்க்.! அதிரடியாய் நீக்கிய கூகுள்!