தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கயோசியாங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 13 அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்தத் தீ விபத்து சம்பவத்தில் தற்போது வரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தப் பகுதியில் இருந்த மின் இணைப்பு கேபிள்கள் மூலம் தீ பரவியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் ஒருவர்,"கடந்த சில நாட்களாக இங்கு மின் இணைப்பில் பிரச்னை இருந்து வந்தது. அவ்வப்போது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் திடீரென ஒரு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நாங்கள் வெளியே வந்து பார்த்த போது இந்த கட்டிடத்தில் தீ எரிய தொடங்கியது. உடனடியாக நாங்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தோம்" எனக் கூறினார்.
மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து 79 பேர் தற்போது வரை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த கட்டிடத்தின் 4ஆவது தளத்திலிருந்து 7ஆவது தளம் வரை சில மக்கள் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் தீயணைப்பு மட்டும் மீட்பு படையினர் மக்களை கண்டறிந்து வெளியே கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற கட்டிடத்தில் கீழ் தளத்தில் சில வருடங்களுக்கு முன்பாக கேளிக்கை விடுதி மற்றும் சில பார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது அவை இல்லாததால் அது சரியான கவனிப்பு இல்லாமல் அதிக குப்பைகளுடன் இருந்ததாக தெரிகிறது. இதுவும் தீ வேகமாக பரவ முக்கியமான காரணமாக தீயணைப்பு துறையினர் கருதுகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 735 முட்டைகள்.. பிக்பாஸ் டாஸ்க்வைவிட கஷ்டமான டாஸ்க் - கின்னஸ் சாதனை வைரல் வீடியோ !