அதிக நேரம் வேலை செய்யும் வேலை கலாச்சாரத்திற்கு எதிராக சீனாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் சங்கம் ஆன்லைன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் உயிர் முக்கியமானது ("Worker Lives Matter") எனும் பிரச்சாரத்தின் மூலமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பம் மற்றும் நிதிநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு தங்களது பணியை நிறைவு செய்கிறார்கள், அதேபோல வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்கிறார்கள் என்பதையெல்லாம் பூர்த்தி செய்ய சொல்லி எக்செல் ஷீட்டையும் கொடுக்கப்பட்டது. இன்று வரைக்கும் 4000க்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர், வேலை செய்யும் நிறுவனம், வகிக்கும் பதவி ஆகிய தங்களது விபரங்களை அதில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக டென்செண்ட் ஹோல்டிங்க்ஸ், அலிபாபா போன்ற டெக் உலகின் ஜாம்பவன்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் முன்வந்து பதிவு செய்திருக்கிறார்கள். அதில் பலரும் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 மணி நேரம் வேலை பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
சீனாவைப் பொறுத்தவரை வேலை நேரம் 996 என அழைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை, வாரத்தின் 6 நாட்களும் சில நிறுவனங்கள் வேலை செய்ய சொல்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனாவின் உச்சநீதிமன்றம் 996 வேலை நேரம் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது.
இதையடுத்து பொதுவெளியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் பைட்டேன்ஸ் மற்றும் க்வாய்ஷு போன்ற நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் 966 என்பதை புறக்கணித்துவிட்டு 955 ( 9-5 மணிவரை 8 மணி நேரம் மற்றும் வாரத்தின் 5 நாட்கள் வேலை) என்பதை உறுதி செய்வதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் என அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
சமீபத்திய மாதங்களில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட நேரம் வேலை வாங்கும் நிறுவனங்கள் மீது கவனம் குவிந்துள்ளது. இதையடுத்து பல்வேறும் நிறுவனங்களும் வேலை நேரத்தை குறைக்கும் முடிவை எடுத்துள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்