ட்விட்டரைப் போன்ற இந்திய செயலியான ’கூ இந்தியா’கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.


அறிமுகமானது முதல் ட்விட்டர் சறுக்கும் இடங்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கும் நேரங்களில் எல்லாம் கூ செயலியை லைம்லைட்டுக்கு கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.


ட்விட்டருக்கு எதிராக ஸ்கோர் செய்யும் 'கூ’


அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது தொடங்கி தற்போது பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.


குறிப்பாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் மாஸ்டடோன் உள்ளிட்ட பிற சமூக வலைதள செயலிகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.


அந்த வகையில் கூ செயலிக்கும் கணிசமான பயனர்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.


இந்நிலையில், பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையிலும், அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் 10 ப்ரொஃபைல் ஃபோட்டோக்களை மாற்றியமைக்கும் வசதி, ட்ராஃப்ட் செய்யும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.


முயற்சியின்" ஒரு பகுதியாக, மேலும் பல அம்சங்களின் "கொஞ்சம்" வரவுள்ளதாக நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.


புதிய அம்சங்கள்


பயனர்கள் இப்போது 10 ஃபோட்டோக்கள் வரை பதிவேற்றலாம். இந்தப் படங்கள்  பயனரின் ப்ரொஃபைலை ஒருவர் பார்வையிடும்போது, ​​ஸ்லைட் ஷோ போன்று தானாக மாறி இயங்கும். டிராக் செய்து இந்தப் படங்களின் வரிசையையும் மாற்றிக் கொள்ளலாம்.


கூவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டமிடல் அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள், தங்களைப் பின்தொடர்பவர்களின் ஃபீட்களில் நெரிசலைத் தவிர்த்து, தங்கள் பதிவு அல்லது கூவுக்கான நேரத்தை நிர்ணயிக்க முடியும். 


கூ பயனர்கள் தங்கள் பதிவுகளை ட்ராஃப்ட் செய்து கொள்ளலாம். கூவை ட்ராஃப்ட் செய்து வைத்து விட்டு பின்னர் நேரம் கிடைக்கும்போது அதனை முழுமையான பதிவாக மாற்றி பகிர்ந்து கொள்ளலாம்.


கூவில் இதுவரை லைக், கமெண்ட், ஷேர், ரீ - கூ போன்ற வசதிகள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது ‘சேவ் கூ’ எனும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட கூவை பயனர்கள் மட்டுமே பார்க்க முடியும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சேவ் வசதிக்கு இணையான இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வசதியை அறிமுகப்படுத்தும் ஒரே மைக்ரோ ப்ளாகிங் தளம் தாங்கள் தான் என கூ தெரிவித்துள்ளது.


ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான அப்ரமேய ராதாகிருஷ்ணா 2020ஆம் ஆண்டு பெங்களூருவில் தனது நண்பர் மயங்க்குடன் ’கூ’ சமூகவலைத்தளத்தைத் தொடங்கினார்.


கூ தொடங்கப்பட்டதுமே மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் ட்விட்டருக்கு எதிராக இதனைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதே சமயம் ஆளும் அரசுடன் ட்விட்டர் தளம் தொடர்ந்து முட்டல் மோதலில் இருந்து வரும் நிலையில் இதனை வாய்ப்பாகக் கொண்டு இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றான உள்ளூர் செயலியாக கூ பாஜகவினரால் முன்னிறுத்தப்பட்டது.


முன்னதாக, ட்விட்டர் போல இல்லாமல் இந்திய அரசின் புதிய ஐ.டி. விதிகளை ஏற்றுக்கொள்வதாக கூ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.