ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள  நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.


கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளன் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது.


அரசியல் சட்டத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார்.


இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இன்று 6 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. நளினி உள்பட 6 பேரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், முருகன் ஆகிய 6 பேரையும் விடுதலை ஆக உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் எதிர்வினை ஆற்றிவருகின்றனர்.


 






இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய  6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது!


6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.  இது வரவேற்கத்தக்கது.


6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது  4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.


அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.