சுரேஷ்குமார், பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் சமீபத்தில் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த காலத்தில் சினிமா நடிகர்கள் பணத்தின் மேல் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்; கலையின் மேல் அல்ல என்று கூறியுள்ளார்.


நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாகவும் இளம் நடிகர்களுக்கு திரைத்துரையின் மேல் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதுமுக நடிகர்கள் பணத்தின் மேல் மிகவும் ஈர்ப்புடன் இருப்பதாகவும், கலையின் மேல் அவர்களது ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  நடிகர்கள் நான்கு ஐந்து கேரவன்கள் கேட்பதாகவும், ஒருவேளை கேரவன் நுழைய முடியாத இடத்தில் படத்தின் லொக்கேஷன் அமைந்தால் லொக்கேஷனையே மாற்ற சொல்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். 


மேலும் இது குறித்து பேசிய அவர்,  “அந்த காலத்தில் இப்படி எல்லாம் இல்லை எனத் தொடங்கி, சினிமா துறையின் பொருளாதாரம் குறித்தும் தற்போது நடிகர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள தவறான கண்ணோட்டம் குறித்தும் பேசி உள்ளார்.


ஆரம்ப கால மலையாள சினிமா:




இது குறித்து அவர் பேசுகையில், ஆரம்ப காலத்தில் மலையாள சினிமா, மெட்ராஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பின்பு அது திருவனந்தபுரத்திற்கு மாறியது. தற்போது கொச்சி தான் மலையாள சினிமாவின் மையமாக அமைந்துள்ளது. இந்த இட மாற்றம் பெரிய கலாச்சார மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது எனலாம். தற்போது சினிமா என்பது பணத்திற்காக மட்டுமே இருக்கின்றது.


முன்னதாக அப்படி இல்லை நடிகர்களும் படக்குழுவினரும் கலைக்காக போராடினோம். பணம் என்பது முக்கியமான காரணிதான்; ஆனால் கலையை நிலை நிறுத்த வேண்டும். கலையால் வளர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். ஆனால் தற்போது அனைவருமே பணத்தின் மீது பேராசைப்படுகிறார்கள். சிலர் கேரவன் இல்லை என்றால் நான் நடிக்கவில்லை என்றே கூறுகிறார்கள்.




அந்த காலத்தில் எத்தனையோ நபர்கள் மனதில் சினிமாவை சுமந்து கொண்டு ரயில் ஏறி மெட்ராஸிற்கு வந்தனர். சிலர் அதில் வெற்றி பெற்றனர்; பலர் தோல்வியுற்றனர். ஆனால் இந்த கால நடிகர்கள், அன்றைய தியாகங்களைப் பற்றி பேசினால் கூட கண்டு கொள்வதில்லை. அப்போது எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவருமே சினிமா மீது பெரும் காதலனுடன் இருந்தோம். நான் மெட்ராஸிற்கு சென்ற பொழுது ரயில் டிக்கெட் கட்டணம் 38 ரூபாய்.


மூன்றாம் கிளாஸ் பெட்டியில் தரையில் செய்தித்தாளை விரித்து தான் படுத்து உறங்கினேன். நான் தங்கி இருந்த அறையில் ஒரே ஒரு கட்டில் தான்.  நான்கு ஐந்து நபர்கள் அங்கு தங்கி இருந்தோம். நான், பிரியதர்ஷன், மோகன்லால் அனைவருமே அந்த அறையில் தான் தங்கி இருந்தோம். யாருமே தனி அறை கேட்கவில்லை. ஆனால் இன்று எல்லோரும் தனி அறை கேட்கிறார்கள். வசதிகள் இல்லையெனில் அவர்கள் நடிக்கவே தயாராக இல்லை. இளம் நடிகர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை சுத்தமாக இல்லை. அது அறையாக இருக்கட்டும் மற்ற வசதிகளாக இருக்கட்டும். ஆனால் அன்றைய தலைமுறை, இருக்கும் வசதிகளை வைத்து சந்தோஷமாக இருந்தோம்; அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம்" என்றார்.


இன்றைய நிலை:


தற்போது மலையாள சினிமாவின் மையம் என்றால் அது எர்ணாகுளம் தான். ஒரு முறை நான் எர்ணாகுளம் சென்று இருந்த போது மிகவும் வருந்தினேன். ஒவ்வொருவரும் தனி தனி குழுக்களாக இருந்தனர். சொல்லப்போனால், அனைவரும் தங்களுக்குள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. வேலை குறித்தோ படங்கள் குறித்தோ அவர்கள் கலந்துரையாடிக் கொள்ளவில்லை.


அப்படித்தான் செய்தாக வேண்டும் என்று நான் கூறவில்லை‌. இருந்தும், அன்று நாங்கள்.. சக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுடன் நாங்கள் நடிக்கவிருக்கும் அல்லது தயாரிக்கவிருக்கும் படங்கள் குறித்து கலந்துரையாடுவோம். அவர்கள் கொடுக்கும் கருத்துக்களை கேட்டுக் கொள்வோம். எங்கள் நண்பர் குழுக்களுக்குள் கதை சொல்லிக் கொள்வோம். கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்‌. இவை அனைத்தும் எங்களின் படங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன.


 



ஆனால் இன்றைய தலைமுறை சினிமாவைத் தவிர அனைத்தை பற்றியும் பேசுகிறார்கள். இன்றைய சினிமா பிளாட்டில் உள்ள தனி அறையில் தோன்றுகிறது. எனக்கு தெரியவில்லை ஒரு அறைக்குள் இருந்து எப்படி பரந்த மனப்பான்மை எழும் என்று..!


இன்றைய தலைமுறை இயக்குனர்கள் குறுகிய மனநிலையுடன் இருக்கிறார்கள். தற்போதைய நிலை எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பணம் தான் முக்கிய குறிக்கோளாக இங்கு உள்ளது. கலையை விட பொருளாதார ரீதியாக சினிமாவை அணுகுகிறார்கள். இந்த நிலைமை மாறும் என்று நான் நம்புகிறேன்.  இது குறித்து பேசுவதற்காக மலையாள சினிமாவில் வரும் டிசம்பர் மாதம் ஐந்து முதல் ஏழாம் தேதி வரை மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம்‌‌. அனைத்து சினிமா குழுக்களையும் அழைத்து இந்த விஷயங்கள் குறித்து பேசவிருக்கிறோம். மலையாள சினிமாவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போதே அது ஆரம்பிக்கவில்லை என்றால்.. அது மிகவும் தாமதமாகிவிடும். என கவலை கொண்டு பேசியுள்ளார்‌. 


மாற்றம் வேண்டும்!


மேலும் ஒரு படம் தயாரிப்பது என்பது தற்பொழுது பெரும் சுமையாகி விட்டது. தயாரிப்பு செலவுகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.  நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். உச்ச நட்சத்திரங்கள் அதிக சம்பளம் கேட்பதில் நியாயம் உண்டு. ஏனென்றால் அவர்களின் பெயரில் அந்த படம் விற்கப்படுகிறது. ஆனால் நடிப்பவர்கள் அனைவரும் அதிக சம்பளம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் 35 முதல் 40 லட்சம் வரை கேட்கிறார்கள். மேலும் ஷூட்டிங்கும் காலை 11 மணி ஆகியும் தொடங்க முடியவில்லை. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஷூட் செய்வதே பெரும் பாடாக உள்ளது காலை ஏழு மணிக்கு தொடங்கி விட வேண்டும். இந்த மாதிரியான விஷயங்கள் மாற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்…என்றார்.


மேலும் தயாரிப்பாளர் அதிக லாபம் பெறுகிறார். சம்பளம் கொடுப்பதற்கு என்ன என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இதற்கு காந்தாரா திரைப்படம் ஒரு நல்ல உதாரணம். எட்டு முதல் 10 கோடி செலவில் படமாக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் ஒரு படத்தை 137 கோடி பட்ஜெட்டில் தயாரித்து அதை 140 கோடி பட்ஜெட்டில் விற்பதில் என்ன லாபம் கிடைக்கப் போகிறது. என்னைப் பொருத்தவரை சினிமா துறை என்பது அதிக லாபம் ஈட்டும் துறை என்று மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அப்படி ஒன்றும் இல்லை. மாதம் 20 முதல் 25 படங்கள் வரை ரிலீஸ் ஆகிறது. இதில் மலையாள திரைப்படங்களின் சக்சஸ் ரேட் என்பது வெறும் 8% தான். வேண்டுமென்றால் 10 சதவீதம் வரை செல்லும். அதற்கு மேல் இல்லை அதுவும் படம் எடுக்கும் போது கவனமாக இல்லை என்றால் பெரும் பொருளாதார இழப்பை ஏற்க நேரிடும்.” என்று பேசியுள்ளார்.