சமுத்ரயான் திட்டத்திற்காக இந்திய அரசு ரூ.5000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
20 அயிரம் அடி ஆழத்தில் சோதனை..
கடலில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலை காண சென்று விபத்துக்குள்ளாகி, 5 பேர் பலியான சம்பவத்தை இன்னும் இந்த உலகம் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பயணத்தை முன்னெடுத்த ஓசியன் கேட் நிறுவனம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாததே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கடலில் 20 ஆயிரம் அடி ஆழத்திற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ய உள்ளது. ஏன்? எதற்காக இந்த ஆபத்தான பயணம் என்பது குறித்து சற்றே விரிவாக இங்கு காணலாம்.
ஆழ்கடல் ஆய்வு
சந்திரயான் 3 விண்கலம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. அதேநேரத்தில் தான் இந்த சமுத்ராயன் திட்டத்தையும் இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. நாம் வாழும் புவியின் பெரும்பாலான பகுதி நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விண்வெளியை ஆராய்ந்த அளவிற்கு நாம் இன்னும் ஆழ்கடல் பகுதியை ஆய்வு செய்ததில்லை. அதில் பல்வேறு மர்மங்கள் இன்னும் விடை தெரியாமல் மறைந்து உள்ளன. அவற்றில் வெறும் 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே நாம் அறிந்துள்ளோம். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆழ்கடல் பகுதியை ஆய்வு செய்து வரும் நிலையில், அந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
சமுத்ரயான் திட்டம்:
சமுத்ரயான் எனும் திட்டத்தை 2019ம் ஆண்டு இந்தியா தொடங்கியது. இதன் முதற்கட்டமாக சென்னையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், ஆய்வுக்கான புதிய மத்சயா 6000 எனும் நீர்மூழ்கி வாகனத்தை உருவாக்கியுள்ளது. இது 6000 மீட்டர் அதாவது 20 ஆயிரம் ஆடி ஆழத்திற்கு சென்று கடலில் ஆய்வு செய்ய உள்ளது. இதன் மூலம் அடுத்து வர உள்ள 5 வருடங்களில் பல ஆழ்கடல் சோதனைகளை இந்திய அரசு நடத்த உள்ளது. ஆழ்கடல் மட்டுமின்றி இந்தியாவின் 3 பக்கமும் சூழந்துள்ள கடற்கரையோர பகுதிகளிலும் ஆய்வு நடத்தும் இந்த திட்டத்திற்காக ரூ.5000 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மனிதர்களை முதன் முறையாக ஆழ்கடலுக்கு அனுப்புவதால், இஸ்ரோவும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.
வடிவமைப்பு:
ஓசியன் கேட் நிறுவனத்தின் டைட்டன் எப்படி கடலுக்கு அடியில் பயணம் மேற்கொண்டதோ, அதே பாணியில் தான் இந்தியாவின் மத்சயா 6000 ஆழ்கடலில் ஆய்வு செய்ய உள்ளது. டைட்டனை விட கூடதலாக 7000 அடி ஆழத்திற்கு செல்ல இருப்பதால், மத்சயாவில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டைட்டனின் வெளிப்புற அமைப்பு ஆனது காம்போசைட் உலோகங்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் ஆழ்கடல் அழுத்தத்தை தாங்க முடியாமல் அது நொறுங்கி விபத்துக்குளானது. ஆனால், மத்சயா 6000 வெளிப்புற பகுதி முழுவதுமாக டைட்டானியத்தால் சுமார் 80 மில்லி மீட்டர் தடிமனில் உருவாக்கப்பட்டுள்ளது.
3 பேர் பயணிக்கும் வசதி:
இந்த நீர்மூழ்கி வாகனம் உருண்டை வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆழ்கடலில் ஏற்படும் அழுத்தம் சாதனம் முழுவதும் பரவும். இதனால், உயர் அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதன் உட்புறத்தில் 3 பேர் மிகவும் நெருக்கமாக அமரும் வகையில் 2.5 மீட்டர் அளவில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்கடலில் 11 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ஜேம்ஸ் கேமரூன் பயன்படுத்திய சாதனமும் இதே வடிவமைப்பை தான் கொண்டு இருந்தது. அதோடு, கடலுக்கு அடியில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் கை போன்ற அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஏற்கனவே 600 மீட்டர் ஆழத்திற்கு இந்த நீர்மூழ்கி சாதனம் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயணத்தின் போது ஒருவேளை ஆழ்கடலில் இந்த வாகனம் தொலைந்துவிட்டால், உள்ளே இருப்பவர்கள் 96 மணி நேரம் உயிர் பிழைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, இணைக்கப்பட்ட ஒரு சிந்தெடிக் ஃபோம் அதன் இருப்பிடத்தை கண்டறிய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலின் மேற்பகுதியில் மிதக்கும் இந்த ஃபோம் ஆழகடலில் இருக்கும் மத்சயாவுடன் தொடர்பிலேயே இருக்கும் என கூறப்படுகிறது.
எதற்கு இந்த பயணம்?
20 ஆடி ஆழத்திற்கு சோதனை மேற்கொள்ளும் இந்த ஆபத்து நிறைந்த பயணத்தின் முக்கிய நோக்கம், கடலுக்கு அடியில் உள்ள வளங்கள் தொடர்பான தரவுகளை சேகரிப்பதே ஆகும். நிலப்பரப்பில் மட்டுமின்றி ஆழ்கடலிலிலும் பல வளங்கள் மறைந்துள்ளன. ஏற்கனவே 5 நாடுகள் அந்த வளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவும் அதற்கான முயற்சிகளை சமுத்ரயான் மூலம் முன்னெடுத்து உள்ளது. கடற்கரை பகுதிகளில் அதிகம் காணப்படும் பாலிமெட்டாலிக் மேகனிஸ், நாடல்ஸ், கேஸ் ஹைட்ரேட்ஸ், ஹைட்ரோ தெர்மல் சல்பைட்ஸ் மற்றும் கோபால்ட் க்ரஷ் போன்ற பல வளங்களை பயன்படுத்தி இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். இதுவரை அறிந்திடாத ஆழ்கடல் தொடர்பான பல்வேறு தகவல்களையும், உண்மைகளையும், சுவாரஸ்யங்களையும் நாம் அறியலாம்.
நீல பொருளாதாரம்:
மேலும், சுற்றுலா துறையிலும் இந்த வசதி இணைக்கப்படலாம். இதன் மூலம் இந்தியாவில் கடற்கரையை ஒட்டி வாழும் நாட்டின் 35 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என கருதப்படுகிறது. இது நீல பொருளாதாரம் என அழைக்கப்படும். இதனால், சமுத்ரயான் திட்டம் இந்தியாவிற்கு என்ன மாதிரியான நன்மைகளை ஏற்படுத்த உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.