சமூக வலைத்தளங்களில் பிரபலமாக மாறுவதற்கு முதலீடு பெரிதாகத் தேவையில்லை; எனினும் திறமை மிக முக்கியம். தங்கள் பணி நேரத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு இருக்கிறது. அதனால் இதில் அதிகளவிலான போட்டி இருக்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் போட்டியாக இந்தத் துறையில் களமிறங்கியுள்ளது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் மனிதர்களைப் போல மெய்நிகர் இணைய மனிதர்களை உருவாக்கி, நிஜ மனிதர்களை செய்வதைச் செய்ய வைத்திருக்கிறார்கள். இதன்மூலம், இந்த நிறுவனங்களுக்குத் தனிநபர்களின் தனியுரிமை சார்ந்த பிரச்னைகளோ, நேரம், இடம் குறித்தோ சிக்கல்களோ இல்லாதது மிகவும் பயன்தரக் கூடியதாக இருக்கிறது. விளம்பரத் துறையில் இந்த வர்த்தகப் பாணி மிக வேகமாகப் பரவி வருகிறது. 


தென் கொரியாவின் சைடுஸ் ஸ்டூடியோ எக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள `ரோஸி’ என்ற மெய்நிகர் இணைய இளம்பெண் தன்னை உருவாக்கியவர்களுக்கு அதிக பணம் ஈட்டித் தந்து வருகிறது. ரோஸி தற்போது சுமார் 100 ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 854 ஆயிரம் தென் கொரிய வான் பணத்தை ஈட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 6.2 கோடி ரூபாய் ஆகும். இதனை சைடுஸ் ஸ்டூடியோ எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேக் சியுங் யியோப் தெரிவித்துள்ளார். 



கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் சைடுஸ் ஸ்டூடியோ எக்ஸ் நிறுவனம் ரோஸியை 22 வயது இளம்பெண்ணாக உருவாக்கியுள்ளது. ரோஸி இதே வயதில் எப்போதும் இருப்பாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆன்லைனில் தனது இருப்பை ரோஸி வெளிப்படுத்தி வந்தாலும், கடந்த ஜூலை மாதம் காப்பீட்டு நிறுவனம் ஒன்றிற்கான விளம்பரத்தின் மூலம், ரோஸி பிரபலமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


ரோஸியை உருவாக்கியது குறித்து சியுங் யியோப் கூறுகையில், திரைப்படங்களில் நடிக்கும் பிரபலங்கள் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குவதால் நீக்கப்படுவதைப் போல, மெய்நிகர் இணைய மனிதர்களால் சர்ச்சைகள் உருவாகாது எனக் கூறியுள்ளார். 






ரோஸியை வடிவமைக்கும் போது, எந்த மனிதரையும் மாடலாகக் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளா சியுங் யியோப், ஏற்கனவே இரு முறை ரோஸியைப் பயன்படுத்தி விளம்பரங்களைச் செய்துள்ளதாகவும், அடுத்தடுத்து 8 விளம்பர ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். `ரோஸிக்கு இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளனர். எனினும் எங்களால் அவற்றைப் பரிசீலித்து முடிக்க இயலவில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



ரோஸியுடன் சியுங் யியொப்


மேலும் அவர், மெய்நிகர் இணைய மனிதர்கள் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என்ற அச்சமில்லை எனவும், கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் விளம்பரங்கள் செய்யப்படுவதால், படப்பிடிப்பு செய்வதற்கான இடம், காலம் முதலான செலவுகள் மிச்சம் எனவும் கூறியுள்ளார்.


ரோஸி தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவாக இருக்கிறாள். விரைவில் சினிமாவிலும், டிவி ஷோக்களிலும் ரோஸியைப் பங்கேற்கச் செய்யும் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார் சியுங் யியொப்.