உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நொய்டா பிராணிகள் பதிவு மையம் செல்லப் பிராணிகள் பதிவுக்கு எளிய நடைமுறையை வகுத்துள்ளது. அதன்படி  நொய்டா வாழ் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் செல்லப் பிராணிகள் குறித்து பதிவு செய்யலாம், மேலும் பொதுமக்கள் செல்லப் பிராணிகளால் ஏற்படும் தொந்தரவு குறித்தும் புகார் கூறலாம். 


இது குறித்து நொய்டா மாநரகாட்சி தலைமைச் செயல் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், நொய்டா மக்களுக்காகவே செல்லப் பிராணிகள் பற்றி பதிவு செய்ய, சிறப்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சிறப்புச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒருவேளை செல்லப் பிராணிகளால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் பொதுமக்கள் அதில் புகார் அளிக்கலாம். செல்லப் பிராணிகள் உரிமையாளர்கள் தங்கள் பிராணிகள் குறித்து அதிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 


செல்லப்பிராணியின் பெயர், நிறம், ப்ரீட், வயது, வளர்ப்பவரின் பெயர் மற்றும் முகவரி, நோய் பிரச்னை என அனைத்தையும் உரிமப் படிவத்தில் பதிவு செய்வது கட்டாயம். அதுமட்டுமன்றி நாய்க்கு எந்த நோய் பிரச்னைகளும் இல்லை என மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும்.  அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். 




* நொய்டா வாழ் மக்கள் தங்களின் செல்லப் பிராணிகள் பற்றி பதிவு செய்வது கட்டாயமாகிறது.
* இதற்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பன்படுத்தி செல்லப் பிராணிகள் குறித்து பதிவு செய்யலாம்.
* ஆண்டு தோறும் செல்லப் பிராணிக்கான லைசன்ஸுக்காக ரூ.1000 வசூலிக்கப்படும்.
* முறைப்படி லைசன்ஸ் பெற்றபின்னர் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றின் முழு விவரம் குறித்தும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
* பார்க், வீதிகள், சாலைகள் என எங்கேயும் செல்லப் பிராணிகளை சுற்றவிடக் கூடாது.
* அதேபோல் செல்லப் பிராணிகள் குடியிருப்பு வீதிகள், சாலைகள் மற்று பூங்காக்களில் மலம் கழிக்கச் செய்யக் கூடாது.
பிராணிகளுக்கும் அசவுகரியம் இல்லாமல், அக்கம்பக்கத்தினருக்கும் தொந்தரவு இல்லாமல் பிராணிகளை வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் முழும்பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. அதேபோல், குடியிருப்புப் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பில்ல் நாய்ப் பண்ணைகள் வைக்கக் கூடாது. இவ்வாறு நொய்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஒருவேளை அவற்றை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டாலோ இல்லை வேறு நபரின் பராமரிப்பில் விட்டோலா இல்லையேல் செல்லப் பிராணி இறந்துவிட்டாலோ அது குறித்த தகவலையும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.