செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு பூமிக்குத் திரும்பும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சி முதல் முறையிலேயே வெற்றிபெற்றுள்ளது.


விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு, அவற்றைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கைக் கோள் ஏவுவதில் அதிகம் செலவு வைப்பதும் ராக்கெட் தான். இதற்காக தான் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் தொகையை செலவு செய்துவந்தது. அதன்பிறகு வந்த தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் ராக்கெட் காரணமாக ராக்கெட் ஏவுவதன் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டது. காரணம் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதை வடிவமைத்தது தான். செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவியவுடன், இந்த ஃபால்கான் 9 பூஸ்டர் மீண்டும் பூமிக்கு தரையிரங்கும். இதனால், பல மில்லியன் டாலர்கள் செலவு குறைந்து, ராக்கெட் ஏவப்படுவதற்கான தொகையும் குறைந்தது. 






இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் 9 போல் அல்லாமல் பூஸ்டரை பூமிக்கு திரும்பும் வழியிலேயே அதை மீட்கும் முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறது ராக்கெட் லேப் நிறுவனம். “There And Back Again” என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் முதல் முயற்சியிலேயே ராக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாக கைப்பற்றி வெற்றிபெற்றிருக்கிறது ராக்கெட் லேப் நிறுவனம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான ராக்கெட் லேப் சிறு சிறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளை செய்துவருகிறது. நியூஸிலாந்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், நேற்று 34 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது.


செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற ‘எலக்ட்ரான்’ என்று பெயரிடப்பட்ட பூஸ்டர், வெற்றிகரமாக செயற்கைக் கோள்களை நிலை நிறுத்திய பின் பூமிக்குத் திரும்பியது. எலக்ட்ரான் 6,500 அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தபோது அதன் பாராஷுட்டுகள் விரிந்து 22 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது, ராக்கெட் லேபின் சிகோர்ஸ்க எஸ்-92 ஹெலிகாப்டர் நீண்ட கயிறு மூலம், எலக்ட்ரான் பூஸ்டரை வெற்றிகரமாகப் பிடித்தது. எனினும், சோதனை முயற்சியின்போது இருந்ததை விட எடை மாறுபாட்டை உணர்ந்ததால், விமானிகள் பூஸ்டரை பசிபிக் கடலில் விழ வைத்தனர். எனினும் இந்த முயற்சி வெற்றிகரமானதாகவேப் பார்க்கப்படுகிறது. அதோடு, ஸ்பேஸ் எக்ஸை விட மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.










ஏனெனில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் 9 பூஸ்டர் தரையிறங்கும்போது அதில் உள்ள எரிபொருள் மூலம் தரையிறங்கும். ஆனால், எலக்ட்ரான் பாராசூட் மூலம் கடலில் விழ வைக்கப்படும். இதற்கு எரிபொருள் தேவையில்லை. கடலில் விழ வைப்பதற்கு பதிலாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் முயற்சி வெற்றிபெற்றதையடுத்து செலவு இன்னும் குறைவாகும் என்று ராக்கெட் லேபை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். எலக்ட்ரான் ஃபர்ஸ்ட் ஸ்டேஜை ஹெலிகாப்டர் மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.